Last Updated : 18 Feb, 2021 03:18 AM

5  

Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

தெய்வீகத்தையும், தேசியத்தையும் மோடி கண்களில் பார்க்கிறேன்!- ராம்குமார் சிவாஜி கணேசன் நேர்காணல்

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் கணேசன் பாஜக-வில் இணைந்துள்ளார். சிவாஜி கணேசனின் லட்சக்கணக்கான ரசிகர்களை உள்ளடக்கிய, அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் தலைவரான இவரின் அரசியல் வருகை, இந்தத் தேர்தல் நேரத்தில் கவனிக்கத்தக்கதாகவே பார்க்கப்படுகிறது. அவரது இந்த திடீர் வருகை, அரசியல் பார்வை, நோக்கம், எதிர்காலத் திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்காக அவர் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி...

திடீரென பாஜக-வில் இணையும் முடிவை எடுக்க என்ன காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். எனக்கு ஆன்மிக விஷயத்திலும் முழு ஈடுபாடு உண்டு. அதையெல்லாம் வைத்துதான் இன்றைக்கு நான் பிஜேபியில் இணைந்துள்ளேன். இந்த முடிவை கிட்டத்தட்ட 8 வருஷங்களுக்கு முன்பே எடுத்துவிட்டேன். நான் இணைந்த நேரத்தில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவியை சந்தித்தது, அடுத்தடுத்த நாளில் பிரதமரை சந்தித்தது எனக்கு பெருமையான விஷயமாக கருதுகிறேன். லட்சக்கணக்கான சிவாஜிகணேசன் ரசிகர்களுக்கும் இந்த விஷயம் பலம் தரும் என்றே பார்க்கிறேன்.

நீங்கள் பாஜக-வில் இணைந்ததை சிவாஜி ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா?

அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் தலைவராக நான் இருக்கிறேன். எனக்கு இப்போது 65 வயதாகிறது. என் வயதுக்கு குறைவான ரசிகர்கள் முதல் என் வயதுடைய ரசிகர்கள் பலரும் மன்றத்தில் உள்ளனர். இதில் பலரும் தங்களது 15, 20 வயது முதல் மன்றத்தில் இருப்பவர்கள். மூன்று, நான்கு தலைமுறை ரசிகர்களும் உள்ளனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் நான் கட்சியில் இணையும் விருப்பத்தை தெரிவித்தேன். அவர்கள் எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர். என்னைப் பார்த்து பலரும் இணைந்துள்ளனர். தொடர்ந்து இணைய தயாராகி வருகின்றனர். அதேபோல, நான் வலுக்கட்டாயமாக யாரையும் சேர வேண்டும் என வற்புறுத்தவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடியை நீங்கள் சந்தித்தபோது, பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உங்களைப் பற்றி அவரிடம் தகவல் அளித்ததாக ஒரு செய்தி வெளியானதே. அது என்ன?

அப்பாவின் சகோதரியாகத்தான் அவரை எங்கள் குடும்பம் பார்க்கும். எனக்கு அத்தை முறை. நான் 2021-ல் பிஜேபியில் இணைவேன் என 8 வருஷங்களுக்கு முன்பு இசைக்குயில் லதாமங்கேஷ்கரிடம்தான் சொல்லி வைத்திருந்தேன். அந்த விஷயத்தை பிரதமரிடம் அவர் முன்பே கூறி வைத்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்தபோது, ‘‘என் சகோதரர் சிவாஜியின் புதல்வன் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்!’’ என்று லதா மங்கேஷ்கர் தெரிவித்திருந்ததாக பிரதமரே என்னிடம் சொன்னார். எனக்கோ பயங்கர ஆச்சர்யம், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெருமையாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி சிவாஜி கணேசனுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில்தான் பாஜக-வில் இணைந்துள்ளீர்களா?

இந்திராகாந்தி தொடங்கி பெருந்தலைவர் காமராசர், ராஜீவ்காந்தி, கலைஞர் கருணாநிதி வரைக்கும், அவர்களுக்காக அப்பா மக்களிடம் ஓட்டுக் கேட்டிருக்கிறார். 1950, 60, 70 காலகட்டங்களில் அப்பா ஒரு சூப்பர் ஸ்டார் என்பது இங்கே உள்ள பலருக்கும் தெரியும். அவரை அரசியலில் ஓர் ஏணியாக வைத்து ஏறியவர்கள் பலர். அதுவும் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி மன்றத்தில் இருந்த நிறையபேர் பிற்காலத்தில் மந்திரியாகக்கூட ஆனார்கள். ஆனால், அப்பா எந்த காலகட்டத்திலும் பிரதிபலனை எதிர்பார்த்ததில்லை.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதுகூட அப்பா தன் சொந்த பணத்தைத்தான் கட்சிக்காக செலவு செய்தார். பல நேரங்களில் நிறைய மனஉளைச்சலை எதிர்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு போக வேண்டும் என நான் ஒரு நாளும் யோசித்ததில்லை. இந்திராகாந்தி ஒரு நல்ல நிர்வாகி. அவர் இருக்கும் வரை கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை.

அதன்பிறகு எப்படி என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இன்றைக்கு நமக்கு கிடைத்துள்ள பிரதமர் ஆன்மிக பலம் நிறைந்தவர். தெய்வீகத்தையும், தேசியத்தையும் எங்களுக்கு நடிகர் திலகம் கற்றுக்கொடுத்திருக்கிறார். அந்த இரண்டையும் பிரதமர் மோடி கண்களில் நான் பார்க்கிறேன். அதனால் பிஜேபியில் இணைந்தேன்.

சட்ட பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா?

அந்த எண்ணம் எனக்கு இதுவரைக்கும் வரவில்லை. பிரச்சாரத்துக்காக சில ஊர்களுக்கு செல்லலாம் என நினைத்திருக்கிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பம் என்று இப்போது சொல்வதெல்லாம்அதிகப் பிரசங்கித்தனம். கட்சியில் அடுத்தடுத்த வேலைகள் என்ன என்பது குறித்துநிர்வாகிகளிடம் பேசுவேன். மற்றபடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நினைக்கவே இல்லை.

விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறதே?

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. நம்ம ஊர்ல ஒரு பிரச்சினை என்றால் பஞ்சாப், ஹரியாணாவுல இன்னொரு பிரச்சினை. விவசாயிகள் தங்களோட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

உங்களைத் தொடர்ந்து நடிகர் பிரபுவும் பாஜக-வில் இணைவாரா?

தம்பி பிரபுவிடம் கூறிவிட்டுத்தான் நான் கட்சியில் சேர்ந்தேன். இது என் தனிப்பட்ட முடிவு. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பேஎடுக்கப்பட்ட முடிவு. அவர் சினிமாவில் இருக்கிறார். பல திசைகளில் அவருக்கு பல்வேறு நண்பர்கள் உள்ளனர். அவர் இப்போதைக்கு அரசியலில் பெரிதாக நாட்டம் காட்டவில்லை என்றே நினைக்கிறேன்.

உங்களது சிவாஜி புரொடக்‌ஷன் பல முக்கிய படங்களை தயாரித்த நிறுவனமாச்சே! அடுத்த திரைப்படத் தயாரிப்பு எப்போது?

இந்த லாக்-டவுன் நேரத்தில் நிறைய கதைகள் கேட்டிருக்கிறோம். நான் புத்தக வாசிப்பாளன். பல புத்தகங்கள் படித்ததில் 6,7 புத்தகங்களை படமாக்கும் எண்ணமும் பிறந்திருக்கிறது. அப்பா நடித்த ‘தில்லானா மோகனம்பாள்’, ‘இருவர் உள்ளம்’, ‘வசந்தமாளிகை’ எல்லாமும்புத்தகங்களை பின்னணியாகக் கொண்ட படங்கள் தானே. அடுத்தடுத்து திரைப்படங்களும், வெப் சீரீஸும் எடுக்க சிவாஜி புரொடக்‌ஷன் கம்பெனியும் தயாராகி வருகிறது. தேர்தல் முடியட்டும். மே அல்லது ஜூன் மாதத்தில் நல்ல அறிவிப்பு இருக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x