Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிகளை கேட்பதிலும் வேகம் காட்டி வருகின்றன. குறிப்பாக, அதிமுக - பாஜக அணிக்கும், திமுக - காங்கிரஸ் அணிக்கும் இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. இதேபோல், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மற்றொரு அணி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், துணைத் தலைவர் தாமோதரன், மாநில செயலாளர் ஜோசப் ராஜா, பொருளாளர் னிவாசன், மகளிர் அணி செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நேற்று காலை 11.30 மணி அளவில் சந்தித்து பேசினர். சுமார் 30 நிமிடங்கள் வரையில் இந்த சந்திப்பு நீடித்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் நிலவரம், இரு கட்சிகளுகளின் கூட்டணி வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இது, மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பு நட்பு ரீதியானது தான் என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆம் அத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் கூறும்போது, “தமிழகத்தில் ஊழல் கட்சிகளை அகற்றுவோம் என்ற முழக்கத்தோடு ஊழலுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம்.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் தலைவருடன், ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகிகள் மரியாதை நிமர்த்தமாக சந்தித்து பேசினோம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகளையும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவருடன் பேசினோம். அவரின் கருத்துகளை கேட்டறிந்தோம். இந்த சந்திப்பு தொடர்பாக எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தெரிவிப்போம்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT