Last Updated : 17 Feb, 2021 03:12 AM

 

Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

பாஜகவுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு: சென்னை, கோவையில் அதிக தொகுதிகளைக் கேட்கும் பாஜக

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக, தமாகா, புதியதமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 2001 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜக 21 தொகுதியில் போட்டியிட்டது. அதன்படி தங்களுக்கு குறைந்தது 35 தொகுதிகளையாவது தர வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2016-ல் சிறிய கட்சிகளுடன் போட்டியிட்ட பாஜக 2.84 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதை சுட்டிக்காட்டிய அதிமுக தரப்பு, 20 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்று கூறியுள்ளது. மொத்த வாக்கு சதவீதம் வேண்டுமானால் 2.84 சதவீதமாக இருக்கலாம் ஆனால், சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரப் பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், ஓசூர் என்று 75 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளோம் என்று பாஜக பட்டியல் அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அதிகபட்சமாக 25 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “இந்தத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதைவிட, எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுகிறோம் என்பதே பாஜகவுக்கு முக்கியம். எனவே, அதிக தொகுதிகளைப் பெறுவதைவிட, குறைவாக இருந்தாலும் வெற்றிவாய்ப்புள்ள, கட்சிக்கு வாக்குச் சாவடி அளவில் கட்டமைப்பு உள்ள தொகுதிகளைப் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளோம். கட்சி மேலிடமும் இதனைத் வலியுறுத்தியுள்ளது" என்றனர்.

எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை என்றாலும் சென்னை, கோவையில் பாஜக அதிக தொகுதிகளைக் கேட்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 பேரவைத் தேர்தலில் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தியாகராய நகர் (19,888), விருகம்பாக்கம் (19,167), சோழிங்கநல்லூர் (14,915), வேளச்சேரி (14,472), துறைமுகம் (13,357), மயிலாப்பூர் (11,720), ஆலந்தூர் (12,806), தாம்பரம் (10,294), அம்பத்தூர் (9,563), அண்ணா நகர் (8,832), ஆயிரம் விளக்கு (8,516), ஆவடி (7,232), எழும்பூர் (7,159), சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (6,281) ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. இதில் பாதி தொகுதிகளை பாஜக கேட்பதால் சிக்கல் எழுந்துள்ளது.

அதுபோல கொங்கு மண்டலத்தில் கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், பல்லடம், சூலூர், ஊட்டி, கூடலூர் என்று முக்கியமான தொகுதிகளையும், கன்னியாகுமரியில் 4 தொகுதிகளையும் பாஜக கேட்பதால் தொகுதிகளை இறுதி செய்வதில் பெரும் பிரச்சினை வெடிக்கும் என்று இருதரப்பிலும் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x