Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
சட்டப்பேரவை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து கமல்ஹாசன் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்.
இருப்பினும், இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். குறிப்பாக கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் அதிக வாக்குகளை பெற்றனர்.
இதன்படி, வட சென்னையில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 167, மத்திய சென்னையில் 92 ஆயிரத்து 249, தென் சென்னையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465, ஸ்ரீ பெரும்புத்தூரில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 383, கோவையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்துக்கு சாதகமான தொகுதிகளை கண்டறியும் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்த சூழலில், சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பதற்காக கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கமல்ஹாசன் பிறந்த ஊராகும். பரமக்குடி தனி தொகுதி என்பதால் கமல்ஹாசனால் அத்தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் என்பதால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, கடந்த மக்களவை தேர்தலில் சென்னையில் அதிக வாக்குகளை பெற்ற மக்களவை தொகுதியில் ஒன்றை தேர்ந்தெடுத்து போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதன்படி, கடந்த மக்களவை தேர்தலில் சென்னையில் தென் சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துக்கு அதிக வாக்குகள் பதிவானது.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக விருகம்பாக்கத்தில் 21 ஆயிரத்து 497, சைதாப்பேட்டையில் 18 ஆயிரத்து 33, தியாகராயநகரில் 18 ஆயிரத்து 272, மயிலாப்பூரில் 18 ஆயிரத்து 722, வேளச்சேரியில் 23 ஆயிரத்து 99, சோழிங்கநல்லூரில் 35 ஆயிரத்து 711 வாக்குகள் பதிவாகியது.
எனவே, தென் சென்னை மக்களவை தொகுதியை உள்ளடக்கிய மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இவற்றில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெற முடியும் என்று கமல்ஹாசன் நினைக்கிறார்.
அதே நேரத்தில், இத்தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டால் சாதியை மையப்படுத்தி வேட்பாளராக நிறுத்தப்படுவதாக விமர்சிக்கப்படுமோ என்ற கோணத்திலும் ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கமல்ஹாசன் நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியை கண்டறியும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில், கமல்ஹாசன் நிற்க உள்ள தொகுதி இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT