Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
அதிமுக கூட்டணியில் தொடர்வதாகவும், 2 அல்லது 3 தொகுதிகள் என்றால் கூட்டணி அமைப்பதில்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
"பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் நடித்து வரும் சரத்குமார் "இந்து தமிழ் திசை" நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியிடுவீர்களா?
கடந்த மக்களவைத் தேர்தலில் அமைந்த அதிமுககூட்டணி அப்படியே நீடிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். அதன்படி நாங்களும் அதிமுககூட்டணியில் தொடர்வோம். பாஜகவுடன், பேசிவிட்டு மற்ற கட்சிகளை அழைப்பார்கள் என்ற எதிர்பார்க்கிறோம். அதன்பிறகுதான் எந்த முடிவும் எடுக்க முடியும். 2 அல்லது 3 தொகுதிகள் என்றால் கூட்டணி அமைப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறோம். தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றுதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?
ஒவ்வொருவரும் இதுபோல சொல்வதற்கு உரிமை உண்டு. அது நடக்குமா அல்லது நடக்காதா என்பது அப்புறம். நானும்கூட அதுபோல சொல்லலாம். என்ன நடக்கிறது என்று அப்புறம்தானே பார்க்க வேண்டும். சொல்ல உரிமை இருப்பதால் அந்த அடிப்படையில் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.
நாங்கள் "ஹாட்ரிக்" வெற்றி பெறுவோம் என்று முதல்வர் பழனிசாமி கூறுகிறாரே?
அவர்கள் ஆட்சிப் பீடத்தில் இருக்கிறார்கள். கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்கிறார்கள். அதுவே திறமைதான். இயக்கத்தை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதால் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதிமுக பிளவுபடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் முதல்வர் பழனிசாமி – ஓபிஎஸ் அணிகள் ஒன்றாகி கட்சியையும், ஆட்சியையும் ஒற்றுமையாக நடத்துகிறார்கள். அந்த நம்பிக்கையில் முதல்வர் கூறலாம். அதுவும் மக்கள் கையில்தான் இருக்கிறது.
முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக ராதிகா அறிவித்துள்ளாரே?
ராதிகா தினமும் சின்னத்திரை படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ஓய்வில்லாமல் உழைக்கிறார். அதனால், ரேடான் மீடியா என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பை முழுமையாக கவனிக்க முடியாதநிலை. கட்சிப் பணியையும் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, 3 பணிகளையும் சரிசமமாகப் பார்க்கப் போவதாகத்தான் அவர் கூறினார். இதற்காக சின்னத்திரை பணிகளைச் சற்று குறைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் ராதிகா போட்டியிடுவாரா?
இத்தேர்தலில் ராதிகா நிச்சயம் போட்டியிடுவார். அவர் சென்னை வேளச்சேரி அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர். கட்சித் தலைவர் என்கிற முறையில் நானும் போட்டியிடுவேன். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி, கொங்கு மண்டலத்தில் சேலம் அல்லது சங்ககிரி தொகுதி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர். கூட்டணி பற்றி முடிவான பிறகுதான் போட்டியிடும் தொகுதியைக் கூற முடியும்.
சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளாரே?
சசிகலா பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று நான் கருத்து தெரிவித்தேன். அவர் அரசியலில் ஈடுபடும்போதுதான் அதுதொடர்பாக கருத்துசொல்ல முடியும். நேரடி அரசியலில் அவர் ஈடுபடுவதற்கு முன்பு கருத்து சொன்னால் சரியாக இருக்காது. இவ்வாறு சரத்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT