Published : 08 Apr 2019 09:58 PM
Last Updated : 08 Apr 2019 09:58 PM

கள நிலவரம்: தேனி தொகுதி யாருக்கு?

தேனி மக்களவைத் தொகுதி விஐபி தொகுதியாக மாறியிருக்கிறது. அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளராக தொகுதியில் சமூகத்தினரின் செல்வாக்கு பெற்ற தங்க தமிழ்ச்செல்வன் என வலுவான போட்டி நிலவுகிறது.

இதுவரை தேர்தலுக்காக தேனிப் பக்கம் எந்த ஒரு பிரதமரும் வந்திராத நிலையில், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தேனியில் பிரச்சாரம் செய்ய வருகிறார். அவர் தேனி வருவதற்கு டெல்லியில் பாஜக மேலிடத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்கே காரணம். தனது ஒட்டுமொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி பிரதமர் மோடியை தேனியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய அழைத்து வருகிறார் ஓபிஎஸ். இத்தனைக்கும் ரவீந்திரநாத் முதல் முறை தேர்தல் களம் காண்பவர்.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும் களமிறக்கப்பட்டுள்ள பயத்தின் எதிரொலியே பிரதமரை பிரச்சாரத்துக்கு அழைத்து வரச் செய்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, பாஜக சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சொந்தக் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய வராமல் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக வருகிறாரே என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.

பிரதமரின் பிரச்சாரம்; தாராள பணப்புழக்கம் என்று தனது வியூகப்பாதையில் ஓபிஎஸ் சரியாகப் பயணிக்கிறார் என்று கட்சி முக்கிய நிர்வாகிகள் மார்தட்டிக் கொள்கின்றனர்.

ஆளுங்கட்சி அளவுக்கு பணம் செலவழிக்க முடியாமல் காங்கிரஸ் திணறுகிறதாம்.  செலவில் எங்களால் அதிமுகவுடன் போட்டியிட முடியாது. ஆனால் தலைவருக்குப் பஞ்சமில்லை. எங்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி வருகிறார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதனால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைக் கணிக்க முடியவில்லை.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர். ஒருவருக்கொருவர் முந்த வேண்டும் என்று மும்முனையிலும் தீவிரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடைசி நேர 'களப்பணி' வியூகத்தை வைத்தே தேர்தல் முடிவு தெரியவரும். கருத்துக் கணிப்புபடி, அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் முதலிடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டாம் இடத்திலும், ரவீந்திரநாத் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x