Published : 08 Apr 2019 08:26 PM
Last Updated : 08 Apr 2019 08:26 PM
புதுச்சேரி மக்களவைத் தேர்தல் களத்தில் 18 பேர் இருந்தாலும் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில்தான் நேரடி போட்டி.
69 வயதான 8 முறை எம்எல்ஏவாக தொடர்ந்து வென்று முதல்வர், அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்த வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் வேட்பாளராகியுள்ளார்.
அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அரசியலுக்கு புதிதான தனியார் மருத்துவக் கல்லூரி தரப்பைச் சேர்ந்த 29 வயது நாராயணசாமி களத்திலுள்ளார். பிரச்சாரம் தொடங்கி இதுவரை புதுச்சேரியில் ஒரிடத்தில் கூட வேட்பாளர் நாராயணசாமி மைக்கில் பேசி வாக்கு சேகரிக்காத விநோதமும் நிகழ்கிறது.
முழுக்க முழுக்க ரங்கசாமி என்பவரை மட்டுமே முன்னிறுத்தி பிரச்சாரம் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் நடக்கிறது. தொகுதி நிர்வாகிகளோ, மாநில நிர்வாகிகளோ நியமிக்காமலே 8 ஆண்டுகளாக கட்சி நடத்துவதால் சிக்கலில் சிக்கியுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு பெரும் உதவியாய் உள்ளது அதிமுக. சில இடங்களில் கூட்டணிக்கட்சியான பாஜகவை தவிர்த்து பிரச்சாரத்திலும் இருதரப்பும் ஈடுபடுகிறது. அதையும் மீறி பாஜக பிரச்சாரம் பல இடங்களில் செய்கிறது. கூட்டணியிலுள்ள பாமக, தேமுதிக, தமாகா ஆகியோர் இருக்கும் இடமே தெரியவில்லை. பிரச்சாரத்திலும் காணவே முடிவதில்லை.
ஆளுங்கட்சியான காங்கிரஸ் தரப்பில் சில தொகுதிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பணி திருப்திகரமாகவே இல்லை என தொண்டர்களே குற்றம்சாட்டும் நிலையுள்ளது. முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தனித்தனியாக பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.
வேட்பாளரும் தனிப் பிரச்சாரத்தில் உள்ளார்.அதே நேரத்தில் கூட்டணிக் கட்சியான திமுக போதியளவு இப்பிரச்சாரத்தில் கண்டுகொள்ளாமல் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை மட்டுமே கவனம் செலுத்துகிறது. சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகியோரும் பிரச்சாரத்தில் வலம் வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் இருந்தும் புதுச்சேரி வளர்ச்சிக்கு மோடியை ஒருமுறை கூட சந்தித்து வற்புறுத்தாதது, இரண்டரை ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக மவுனமாகவே மக்களை கண்டுகொள்ளாமல் இருந்தது ஆகியவை தொடங்கி ரங்கசாமியை குற்றம் சாட்டி பிரச்சாரத்தை முன்வைக்கிறது காங்கிரஸ். குறிப்பாக பாஜகவின் பிரதிநிதி என்.ஆர்.காங்கிரஸ் என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளது காங்கிரஸ்.
அதே நேரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளை தாண்டியும் ஆளுநரைக் குறை கூறியே காங்கிரஸ் காலம் தள்ளுவதாக பிரச்சாரத்தை முன்வைத்துள்ளார் ரங்கசாமி. இலவச அரிசி தொடர்ந்து ரேஷனில் போடாதது, வரி உயர்வு ஆகிய விஷயங்களை முன்வைக்கிறார்கள்.
ரங்கசாமிக்கு அடுத்த நிலையில் கூட அவரது கட்சியில் பிரச்சாரத்துக்கு யாருமில்லை என்ற குறையை நிவர்த்தி செய்கிறார் அதிமுக சட்டப்பேரவைகுழு தலைவர் அன்பழகன். காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு அடுத்தடுத்த பிரச்சாரத்தில் மறுப்பையும் ரங்கசாமி தெரிவிப்பது புதிது.
தற்போதைய காலகட்டத்தில் வேட்பாளர்களின் தகுதி, மத்திய மாநில அரசுகளின் மீதான அதிருப்தி , வாக்குறுதி ஆகிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் தரப்பு முன்னிலையிலும், அவர்களை எட்டிப்பிடிக்கும் தொலைவில் என்.ஆர்.காங்கிரஸும் உள்ளது.
அதிக பண நடமாட்டமுள்ள தொகுதிகளில் ஒன்றான புதுச்சேரியில் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரமே அவர்களின் வெற்றி வாய்ப்பை இறுதி செய்யும் என அனைத்துக் கட்சிகளும் மட்டுமில்லாமல் மக்களும் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
புதுச்சேரி தொகுதியைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக நாராயணசாமியும் களம் இறங்கியுள்ளனர். மதில் மேல் பூனையாக முடிவைக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. கருத்துக்கணிப்பின் படி, வைத்திலிங்கம் முதலிடத்தில் உள்ளார். நாராயணசாமி 2-ம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஷர்மிளா பேகமும், மக்கள் நீதி மய்யத்தின் சுப்பிரமணியமும் சம வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT