Published : 02 May 2019 03:26 PM
Last Updated : 02 May 2019 03:26 PM
தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம், ஏப்.18-ம் தேதி மக்களவைப் பொதுத்தேர்தலுடன் இடைத்தேர்தலை அறிவித்தது. மீதி 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்ததால் தேர்தல் ஆணையம் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். இந்த தொகுதி, ஓட்டப்பிடாரம் தாலுகா முழுவதும், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாக்களில் ஒருசில பகுதிகளை உள்ளடக்கியது ஓட்டப்பிடாரம் தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சியில் சில பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வருகின்றன.
முழுக்க முழுக்க கிராமங்களை அதிகம் கொண்ட இந்த தொகுதியின் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே. ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற மானாவாரி விவசாயத்தை நம்பி தான் விவசாயிகள் உள்ளனர். சில தனியார் அனல்மின் நிலையங்கள் இந்த தொகுதியில் உள்ளன. ஆயத்த ஆடை தொழிலில் பிரசித்தி பெற்ற குட்டி திருப்பூர் என்றழைக்கப்படும் புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தான் அமைந்துள்ளது.
இந்த தொகுதியில் பிரச்சினைகள் ஏராளம். குளிர்பதன கிடங்கு, அரசுக்கல்லூரி, ஆயத்த ஆடை பூங்கா, கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று தண்ணீரை ஓட்டப்பிடாரம் பகுதிக்கு திருப்பி விட வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளன. கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடும் இந்த தொகுதியில் தற்போது நிலவும் முக்கிய பிரச்சினைகள்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் 65,071 வாக்குகளையும், அவரை எதிர்த்து திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 63,953 வாக்குகளையும் பெற்றார். இந்த தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 14040 வாக்குகளை பெற்றது. தனித்து போட்டியிட்ட பாஜக 5894 வாக்குகளையும் பாமக 1062 வாக்குகளையும் பெற்றன.
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | கட்சி |
1967 | முத்தையா | சுதந்திரா கட்சி |
1977 | வேலுச்சாமி | காங்கிரஸ் |
1980 | அப்பாதுரை | சிபிஐ |
1984 | ஆறுமுகம் | காங்கிரஸ் |
1989 | முத்தையா | திமுக |
1991 | ராஜமன்னார் | அதிமுக |
1996 | கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் |
2001 | சிவபெருமாள் | அதிமுக |
2006 | மோகன் | அதிமுக |
2011 | கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் |
2016 | சுந்தர்ராஜ் | அதிமுக |
தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பி.மோகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் சண்முகையா களமிறக்கப்பட்டுள்ளார். அமமுக சார்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ சுந்தர்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யாவும் போட்டியிடுகின்றனர்.
புதிய தமிழகத்தின் வாக்குகள் அதிமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி 2முறை வென்ற தொகுதி என்பதால் அவரது ஆதரவை அதிமுக பெருமளவு நம்பியுள்ளது. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ள தொகுதி. அதிமுக பலமுறை வென்ற இந்த தொகுதியில் அக்கட்சிக்கும் கணிசமான வாக்கு வங்கி உண்டு.
அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பலமுறை வென்ற பலத்துடன் அதிமுக தொகுதியை வெல்லும் நோக்கத்துடன் பணியாற்றி வருகிறது.
திமுகவை பொறுத்தவரையில் தொகுதியை குறி வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து முதல்கட்ட பிரச்சாரம் செய்துள்ளார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடம் பெற்றுள்ள தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வேட்பாளர் என்பதால் ஓட்டப்பிடாரத்தில் தொடக்கம் முதலே திமுக சார்பில் சுறு சுறுப்பாக பணிகள் நடந்து வருகின்றன.
அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் முன்னாள் எம்எல்ஏ என்பதால் அவரும் களப்பணியில் வேகம் காட்டுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT