Published : 06 Apr 2019 12:00 AM
Last Updated : 06 Apr 2019 12:00 AM
நிலக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் அதீத கவனம் செலுத்துவதால் திண்டுக் கல் மக்களவைத் தொகுதி பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை பேரவைத் தொகுதி யில் எப்படியும் வென்று விட அதி முகவினர் தீவிரமாக பணியாற்று கின்றனர். அமைச்சர் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் தினமும் நிலக்கோட்டை சென்று தொண்டர்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தந்தப் பகுதி அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து பிரச்சாரம் செய்கிறார்.
நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் பாமக வேட்பாளர் ஜோதி முத்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஒன்றியச் செயலாளர் பாலசு ப்பிரமணியன், பாஜக தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம், பழநி, ஆத்தூர் தொகுதிகளில் அந்தந்த பகுதி அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளை கொண்டே பாமக வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நத்தம் பகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து இரு தினங்களுக்கு முன் நடந்த பிரச்சாரத்தில் நத்தம் விசுவநாதன் சில கிராமங்களுக்குச் சென்றதோடு சரி, பெரும்பாலான கிராமங்களில் நடந்த பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக இவரது மைத்துனரும் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளருமான கண்ணன் வேட்பாளருடன் சென்றார்.
தொகுதி முழுவதும் நடைபெறும் பிரச்சாரத்தில் அமைச்சர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் உடன் வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என பாமகவினர் ஆதங்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியைச் சேர்ந்த நிலக்கோட்டை, நத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தவிர பிற சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாமகவின் பிரச்சாரம் தொய்வடைந்த நிலையிலையே காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT