Published : 30 Mar 2019 10:05 AM
Last Updated : 30 Mar 2019 10:05 AM
அதிமுக அரசின் பரிசுப்பெட்டகம் திட்டத்தை நினைவுபடுத்துவது போன்று அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட பரிசுப்பெட்டி சின்னம் இருப்பதால், அந்தத் திட்டம் குறித்து பிரச்சாரத்தில் பேச அதிமுகவினர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன. இதில், அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் போன்றவற்றுக்கு நிரந்தரச் சின்னம் இருப்பதால் முதல் கட்ட பிரச்சாரத்தை நடத்திவிட்டன. நாம் தமிழர் கட்சிக்கு கரும்புடன் கூடிய விவசாயி சின்னமும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டதால் அவர்களும் தங்கள் சின்னங்களை மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆனால், அமமுகவுக்கு சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அவர்கள் கேட்ட குக்கர் சின்னத்துக்கு முட்டுக்கட்டை போட்டு அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அமமுகவுக்கு பொதுச்சின்னத்தை தருவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்படி அமமுகவுக்கு ‘பரிசுப்பெட்டி’ என்ற சின்னத்தை ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக பேசிய தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர், தங்களது வெற்றியை முன்கூட்டியே அறிவித்தது போன்று, சின்னம் கிடைத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதே நேரம், தங்கள் அரசின் திட்டமொன்றின் பெயரில் இச்சின்னம் இருப்பதால், இனிவரும் பிரச்சாரக் கூட்டங்களில் அந்த திட்டத்தைச் சொல்லி வாக்கு கேட்பதில் அதிமுகவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் அடங்கிய ‘பரிசுப்பெட்டகம்’ திட்டத்தை அறிவித்தார். தற்போது அதிமுகவினர் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், இந்த பரிசுப்பெட்டகம் திட்டத்தைக் கூறி வாக்குச் சேகரிக்கின்றனர். இப்போது, அதே பெயரில் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு ‘பரிசுப்பெட்டி’ என்ற சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பரிசுப்பெட்டகம் என்பதை உச்சரிக்க அதிமுகவினர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமமுக செய்தித்தொடர்பாளர் வெற்றிபாண்டியன், மதுரை மாநகர் வடக்கு 1-ம் பகுதிச் செயலாளர் அசோகன் ஆகியோர் கூறியதாவது: ஜெயலிலதா அறிவித்த நலத்திட்டங்களில் ஒன்று குழந்தைகளுக்கான பரிசுப்பெட்டகம். அமமுகவுக்கு என்ன சின்னம் கிடைக்குமோ என எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டத்தில் ஒன்றே சின்னமாக கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமைச்சர்கள், நிர்வாகிகள் அரசின் சாதனைகளை அடுக்கும்போது பரிசுப்பெட்டகம் என்ற பெயரை தவிர்க்க வாய்ப்புள்ளது. அதே நேரம் நாங்கள் பரிசுப்பெட்டகத்தை முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்வோம் என்றனர்.
இது தொடர்பாக அதிமுகவினரிடம் கேட்டபோது, "அமமுக சார்பில் போட்டியிடும் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்கள். அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள சின்னத்துக்கும், ஜெயலலிதா வழங்கிய பரிசுப்பெட்டகத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எங்களது அரசின் சாதனைகளில் பரிசுப் பெட்டகம் திட்டமும் ஒன்று" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT