Published : 23 Mar 2019 11:34 AM
Last Updated : 23 Mar 2019 11:34 AM
ராமநாதபுரம் தொகுதி மக்கள் மதச்சார்பற்றவர்கள். இங்கு சாதிகூட ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் ஆனால் மதபேதம் இல்லவே இல்லை. மதச்சார்பற்ற மக்கள் மோடியை விரும்பமாட்டார்கள். அதனால் நயினார் நாகேந்திரன் எனக்கு போட்டி வேட்பாளரே இல்லை என உற்சாகமாகக் கூறுகிறார் அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த்.
வ.து.ந.ஆனந்த் அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன். வ.து.நடராஜன் தமிழக தொழிலாளர் நலத்துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர். ஆனந்தின் தாயார் இந்திராணி ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்தவர். இப்படியாக அதிமுக குடும்பம் என்றே அறியப்பட்டவர் ஆனந்த்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் அணியில் இணைந்தார். தற்போது அமமுக சார்பில் ராமநாதபுரம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவர் பி.இ. பட்டதாரி. முழுநேர அரசியல்வாதியாக செயல்படும் இவருக்கு விவசாயத் தொழிலும் உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுர கள நிலவரம் குறித்து 'இந்து தமிழ் திசை'க்கு ராமநாதபுரம் வேட்பாளர் அளித்த பேட்டி:
ராமநாதபுரத்தில் அமமுகவுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது? கள நிலவரம் சொல்லுங்கள்?
நான் பிறந்து வளர்ந்தது இந்த ஊர் தான். எனக்கு இந்த தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தொடங்கி வாக்குச்சாவடி வரை அத்தனையும் அத்துப்படி. அனைத்து சமுதாய மக்களுடனும் நல்ல உறவு இருக்கிறது.
திருச்சுழியிலிருந்து அறந்தாங்கி செல்கிறேன் என்றால் அங்கு எந்த இடத்தில் விவசாயம் அதிகம். எந்த இடத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பது எனக்கு அடி முதல் நுனி வரை தெரியும். வாக்கு சேகரிக்கச் செல்லும்போது ஒவ்வொரு பகுதி மக்களின் பிரச்சினை என்னவென்பது அவர்கள் சொல்லாமலே எனக்குத் தெரியும்.
ஆனால் திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் தொகுதியைப் பற்றி இனிதான் கேட்டு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நன்கு அறியப்பட்ட என்னைத்தான் மக்கள் நம்புவார்கள்.
மேலும், ராமநாதபுரம் தொகுதி மக்கள் மதச்சார்பற்றவர்கள். இங்கு சாதிகூட ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தலாம் ஆனால் மதபேதம் இல்லவே இல்லை. மதச்சார்பற்ற மக்கள் மோடியை விரும்பமாட்டார்கள். அதனால் நயினார் நாகேந்திரன் எனக்கு போட்டி வேட்பாளரே இல்லை.
ஊர் செல்வாக்கு இருக்கிறது என்கிறீர்கள். ஊரில் உங்களை அதிமுக குடும்பமாகத்தானே இத்தனை காலம் அறிந்திருப்பார்கள்?
உண்மைதான். ஆனால், இப்போது அதிமுக வேட்பாளர் யாரும் இங்கு நிற்கவில்லையே. கூட்டணியிலிருந்து பாஜக வேட்பாளரைத்தானே நிறுத்தியிருக்கிறார்கள். அதிமுக ஓட்டு எல்லாம் மதச்சார்பற்ற அமமுகவுத்தான் விழும்.
அப்படிப் பார்த்தால் திமுக வேட்பாளர் மதச்சார்பற்ற கூட்டணியில்தானே இருக்கிறார்? அவருக்குத்தான் மோடி அதிருப்தி வாக்குகள் செல்ல வேண்டும்?
திமுக வேட்பாளர் கா.நவாஸ் கனி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும் அவருக்கு இந்த ஊர் பரிச்சயம் இல்லை. அவர் சென்னையில்தான் வசிக்கிறார். அவருக்கு தொகுதியில் நிலவும் பிரச்சினைகளின் ஆழம், மக்களின் தேவை என்னவென்பதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் தங்களுக்குப் பரிச்சயமானவரைத் தேர்ந்தெடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ராமநாதபுரத்தில் அமமுகவுக்கே வெற்றி வாய்ப்பு. மற்ற இருவரும் இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டியிடுகிறார்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு சாதி வாக்குகள் பலம் சேர்க்கும் என்ற கருத்து பற்றி..
அமமுக சாதி, மதம் பார்ப்பதில்லை. மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும். சாதிக்காரர்களே என்றாலும் ஊருக்கும் அறிமுகம் இல்லாதவருக்கு எப்படி வாக்களிப்பார்கள். ஒருவேளை அதிமுக வேட்பாளரே களமிறக்கப்பட்டிருந்தால் சாதி வாக்குகள் பற்றி பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், நயினார் பாஜகவைச் சேர்ந்தவர். எந்த சாதியைச் சேர்ந்தவரும் தாமரையை ஆதரிக்க யாரும் தயாராக இல்லை.
தொகுதியின் பிரதான பிரச்சினை என நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது?
மீனவர் நலன் காப்பதையே நான் பிரதான பிரச்சினையாகப் பார்க்கிறேன். மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படை அதனை மீட்க மிக கடினமான அபராதத்தை விதிக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது. அவர்களின் படகுகளுக்கான அபராதத்தைக் குறைக்க முற்படுவேன்.
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு பெற்றுத்தர வேண்டும். பகல் நேரத்தில் சென்னைக்கான ரயில் சேவை மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கிறது. அதனைப் பெற்றுத்தர வேண்டும். ராமநாதபுரத்துக்கு விமான நிலையம் கொண்டுவர வேண்டும். ராமேஸ்வரம் இருப்பதால் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கான தடையை விலக்க வேண்டும். இப்படி தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
சின்னம் இல்லாதது தாக்கத்தை ஏற்படுத்துமா?
சின்னம் இல்லாததால் பிரச்சினை எதுவுமே இல்லை என்று மறுக்கமாட்டேன். ஆனால், இப்போதைக்கு இரண்டு ஆறுதல் இருக்கின்றன. ஒன்று, அதிமுக நேரடியாக வேட்பாளரை இறக்கவில்லை. அதனால் மக்கள் முன்னால் இரட்டை இலை இல்லை தாமரையே இருக்கிறது.
இரண்டாவதாக தொகுதியில் கிராமத்துக்கு ஒருவர் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிடிவி அண்ணனின் சின்னம் இதுதான் என்பதை இரண்டு மணி நேரத்தில் அவர்கள் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள்.
இவ்வாறு தனது வெற்றி உறுதி என்று உற்சாகமாகக் கூறுகிறார் அமமுக வேட்பாளர் ஆனந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT