Published : 28 Mar 2019 05:59 AM
Last Updated : 28 Mar 2019 05:59 AM
மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு தலைமைத் தேர்தல் காரியாலயம் கூட திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அதிமுகவுக்கு இணையாக தேர்தல் பணி மேற்கொள்ள பணம் தடையாக உள்ளதாக திமுகவினர் கவலை தெரிவிக்கின்றனர்.
மதுரை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனுத் தாக்கல், வேட்பாளர் அறிமுகக் கூட்டம், பிரமுகர்கள் சந்திப்பு, பிரச்சாரம் என அனைத்திலும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முந்திக் கொண்டுள்ளார்.
சு.வெங்கடேசனின் பிரச்சாரத்தில் மத்தியத் தொகுதி முதலில் இடம் பெற்றது. பிரச்சாரத்துக்கான செலவுகளை திமுக எம்எல்ஏ பிடிஆர்பி. பழனிவேல் தியாகராஜன் ஏற்றார். அடுத்தகட்டப் பிரச்சாரத்தை மேற்குத் தொகுதியில் வெங்கடேசன் நாளை தொடங்குகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெங்டேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இன்று (மார்ச் 28) திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரையில் வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக சுற்றுச்சாலையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பேரவைத் தொகுதிக்கு தலா 3 நாட்கள் என 5 தொகுதிகளில் 15 நாட்கள் வேட்பாளர் பிரச்சாரம் செய்கிறார்.
மார்க்சிஸ்ட் சார்பில் ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகச, மாதர் சங்கம் என கிளை அமைப்புகள் திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இது வெங்கடேசனுக்கு பலமாக இருந்தாலும் திமுகவினரை, அதிமுகவுக்கு நிகராக தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு செலவே பிரதான காரணம்.
திமுக நிர்வாகிகள் கூறியதாவது: திமுக கூட்டணிக்கு மதுரையில் தலைமைத் தேர்தல் அலுவலகமே திறக்கப்படவில்லை. பேரவைத் தொகுதி அளவிலும் அலுவலகம் திறக்கவில்லை. பிரச்சாரம் செய்யும்போது, மக்களை அதிகம் திரட்ட வேண்டும். பணம் கொடுத்து அழைக்காவிட்டாலும், அடிப்படைச் செலவுகளை செய்யவேண்டும்
மத்திய, கிழக்கு தொகுதிகளில் எம்எல்ஏக்கள் பிடிஆர்பி. தியாகராஜன், மூர்த்தி செலவு களை ஏற்ற நிலையில், இதர தொகுதிகளில் செலவு செய் வதில் சிக்கல் உள்ளது. மு.க.ஸ்டாலின் கூட்ட ஏற்பாடுகளை திமுகவே மேற் கொள்கிறது.
தினமும் வார்டு வார்டாக பிரச்சாரம் செய்வதற்கான செலவுகளை திமுகவினர் ஏற்பதில் சிக்கல் உள்ளது. மார்க்சிஸ்ட் பணம் கொடுக்கும் கட்சி அல்ல என்பதை அறிவோம். அதிமுக பணத்தை தாராளமாகச் செலவிடுகிறது. அமமுக வினரும் நிர்வாகிகளின் முதற்கட்டச் செலவை ஏற்றுள்ளனர்.
ஆனால், 9 ஆண்டுகளாக எதிர்க் கட்சியாக உள்ளதால் எவ்வளவு கட்சி நிகழ்ச்சிகளுக்கு செலவிட்டிருப்போம். தேர்தல் செலவையும் எப்படி செய்ய முடியும்? மற்ற கட்சிகள் கூட்டத்தை பார்த்து பெருமூச்சுதான் விட முடிகிறது. மாற்று கட்சியினரின் கூட்டங்களுக்கு சென்றாலே நம்மையும் மூளைச்சலவை செய்துவிடுவர். இதையும் தடுக்க வேண்டும். மாநகர் திமுக பொறுப்புக்குழு தலைவர் கோ. தளபதி தலைமையில் முடிந்த அளவு தேர்தல் பணிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும், பணியை வேகப்படுத்த மார்க்சிஸ்ட் - திமுக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
மார்க்சிஸ்ட் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ‘எங்கள் கட்சியினர் டீ குடித்தே வேலை பார்ப்பர். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் பணம் தர மாட்டோம். திமுகவினர் அவர்களின் செலவை பார்த்துக் கொள்வர். எங்கள் கட்சிப் பணிகளை மக்களிடம் இருந்து பணம் வசூலித்து மேற்கொள்கிறோம்.
மதுரை கட்சி அலுவலகத்தையே தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. வேறு இடம் தேடவில்லை. அந்தந்த பகுதி கட்சி அலுவலகங்களை தேர்தல் அலுவலகமாக மாற்றிக் கொண்டோம் என்றனர்.
திமுக கூட்டணியின் நிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தும் உத்தியை அதிமுக கையாளத் தொடங்கி உள்ளதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். இதற்கு இன்று மதுரை வரும் மு.க.ஸ்டாலின் முடிவு கட்ட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT