Published : 22 Mar 2019 09:35 AM
Last Updated : 22 Mar 2019 09:35 AM

மண்ணின் மைந்தனா... சமுதாய வாக்குகளா? - பரபரக்கிறது திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியை தங்களின் கோட்டையாக திமுகவினர் கருதும் நிலையில், எப்படியாவது இத்தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என முதலில் களத்தில் இறங்கியது அதிமுகதான்.

மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களிடமும் கோரிக்கைகளைக் கேட்கும் கூட்டங்களை அரசு சார்பில் நடத்திய அமைச்சர் ஆர்.காமராஜ், திருவாரூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பை தந்தால் மேலும் பல திட்டங்களை தற்போதைய ஆட்சியின் மூலம் பெற்றுத் தருவோம் எனக் கூறி தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்கினார்.

திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், அதிமுக சார்பில் நாகை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்ச ருமான ஆர்.ஜீவானந்தம் (இவர் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தாரா என்பதை கட்சியினராலேயே உறுதிப்படுத்த முடியவில்லை), அமமுக சார்பில் திருவாரூர் தொகுதியைச் சாராத எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில், என்ன நோக்கத் துக்காக உள்ளூர் தொகுதியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்காமல் வெளிமாவட்ட பிரமுகருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி திருவாரூர் பகுதி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “திருவாரூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அந்தச் சமூகத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்குத் தரும் வாய்ப்பு, மற்றவருக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை கவனத்தில்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றனர். இதன்மூலம் யாருடைய கோபத்துக்கும் ஆளாகாமல் அனைத்து சமுதாய வாக்குகளையும் ஒட்டுமொத்தமாகப் பெற முடியும் என்பது அதிமுகவின் திட்டமாம்.

மாவட்டத் தலைநகரம், அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் எனத் தொகுதி மக்களின் நலன்கருதி திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் மக்களின் நன்மதிப்புக்குரிய தலைவராக விளங்கியவர் மண்ணின் மைந்தர்- திமுக தலைவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தங்களது கோட்டையாகவே திருவாரூரைக் கருதுகின்றனர் திமுகவினர்.

தங்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் கலைவாணன், வார்டு பிரதிநிதி முதல் அனைத்து நிர்வாகிகளையும் நேரடியாக அறிந்தவர். எங்கள் மாவட்டச் செயலாளருக்காக கூடுதல் ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றினால் கட்சியில் நல்ல முக்கியத்துவம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே, எங்களின் களப்பணியை அதிமுகவினர் எதிர்கொள்வது சற்று கடினம் என்கின்றனர்.

அமமுக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும் திருவாரூர் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பது அமமுகவுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம். அது அக்கட்சியினரின் தேர்தல் களப்பணியை பொறுத்தே அமையும்.

இந்நிலையில், அதிமுகவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாது என்பதற்காக வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது எந்த வகையில் அக்கட்சிக்கு லாபத்தைத் தரும்?, தொகுதியைச் சேர்ந்தவர்- மண்ணின் மைந்தன் என்ற கருத்து திமுகவின் வெற்றிக்கு வலு சேர்க்குமா? அதிமுகவின் தேர்தல் உத்தியையும், திமுகவின் களப்பணியையும் எந்த வகையில் எதிர்கொள்ளப்போகிறது அமமுக என்பது நாட்கள் போகப் போகத் தெரியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x