Published : 18 Mar 2019 01:38 PM
Last Updated : 18 Mar 2019 01:38 PM
அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் இடத்துக்கு வர ஆசைப்பட்டார் என்றும் தினகரனின் மனைவி பயங்கரமான ஆதிக்கவாதி என்றும் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் 'இந்து தமிழ்' இணையத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி இதோ...
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிர்வுகளை யாராலும் மறக்க முடியாது. உண்மையில் அப்போது என்னதான் நடந்தது?
'அம்மா'வின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வரானார். கட்சியில் எல்லோரும் சேர்ந்துதான் 'சின்னம்மா'வை பொதுச்செயலாளராக்க முடிவுசெய்தனர். தற்போதைய முதல்வரும் துணை முதல்வரும் சட்ட ரீதியாக பொதுக்குழு கூட்டி, சின்னம்மாவைத் தேர்வுசெய்தனர். தேர்தலைச் சந்திக்காமலே முதல்வராக வேண்டும் என்று சசிகலா முடிவு செய்தார். மக்கள் அந்த நேரத்தில் அந்தக் குடும்பத்தின் மீது பெரிய வெறுப்பில் இருந்தனர்.
கட்சியில் பிளவு ஏற்படக் கூடாது என்று அனைவரையும் நாங்கள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தோம். ஓபிஎஸ்ஸைத் தொந்தரவுசெய்து, உடனடியாக முதல்வராக நினைத்தார் சசிகலா. ஓரிரு மாதங்கள் கழித்து முதல்வர் பதவியைக் கேட்டிருந்தால் ஓபிஎஸ் கொடுத்திருப்பார். ஆனால் வலுக்கட்டாயமாகப் பதவியைக் கேட்கப்பட்டது. பதவியா, தன்மானமா என்று வரும்போது தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தேர்ந்தெடுத்தார்.
அப்போதும் யாருமே சசிகலா தரப்புக்கு எதிர்ப்பாக செயல்படவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் முழு ஆதரவு அளித்து, அனைவரும் தினகரனுக்காகப் பணியாற்றினோம். ஆனால் அந்த நன்றியையும் தொண்டர்களின் உழைப்பையும் அவர் வீணடித்தார்.
சசிகலா படம் இல்லாமல் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று முன்மொழிந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிடவேண்டும்; உடனே முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். பெரும் பேராசை கொண்ட அவர், நானே ராஜா; நானே மந்திரி என்ற ஆதிக்க மனப்பான்மையில் செயல்பட்டார். நன்றி மறந்த தினகரன், தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ், யார் இதில் சிறந்தவர்?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் தனித்தன்மை கொண்டவர்கள். இருவரையும் சமமாகத்தான் பார்க்கிறேன்.
கட்சி சாராமல் ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமும் உங்களுக்குப் பிடித்தது எது?
'அம்மா' என்றால் வேறு வார்த்தையே கிடையாது. அவர் ஒரு லெஜண்ட். கருணாநிதியிடம் பிடித்தது ஒருநாளும் அவர் 'அம்மா'வைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. அந்த அம்மையார் என்று அழைப்பது பிடிக்கும்
சக அரசியல்வாதியாக கனிமொழியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? தூத்துக்குடியில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்களே?
கனிமொழியைப் பொருத்தவரை தொடர்ச்சியாக, அவரின் அப்பா இருக்கும் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறார்கள். ஒரு பெண் அரசியல்வாதியாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் தூத்துக்குடி மட்டுமல்ல அவர் எங்கு நின்றாலும் திமுகவைச் சேர்ந்தவர். திமுக வேட்பாளர் எங்கு நின்றாலும், அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான்.
எந்த வேலைக்குச் சென்றாலும் ஏன் வீட்டிலே கூட அரசியல் இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த இந்தத் துறையில், எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல் ஒரு பெண்ணாக எப்படி இந்த நிலைக்கு வரமுடிந்தது?
புரட்சித் தலைவரையும், அம்மாவையும் பார்த்துதான் விரும்பி அரசியலுக்கு வந்தேன். 'அம்மா'வின் நேரடி அறிமுகம் கிடைத்தபிறகு, தைரியமும் பாதுகாப்பும் இருந்தது. அதனால் பெரியளவில் எந்த சோதனைகளையும் சந்திக்கவில்லை. இப்போது கட்சியில் சீனியர் என்பதால், பிரச்சினையில்லை.
வெளியில் சென்றாலோ, வேலைக்குப் போனாலோ, வீட்டில் இருந்தாலோ அனைவருமே ஆணாதிக்கத்தை உணர்ந்திருப்பீர்கள். நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதை நீங்கள் நடுநிலையோடு கையாள வேண்டும். நீங்கள் அட்ஜஸ்ட் செய்யலாம். விட்டுக்கொடுத்துப் போகலாம். ஆனால் அடிபணிந்துமட்டும் போய்விடாதீர்கள்.
என்னைப் பொருத்தவரை குடும்ப சூழல் பக்கபலமாக இருந்தது. நீ எங்கள் செல்கிறாய், யாருடன் உட்கார்ந்து பணியாற்றினாய் என்று வீட்டில் யாரும் கேட்டதில்லை. முழு நம்பிக்கையையும் ஆதரவையும் குடும்பம் அளித்தது. எதுவாக இருந்தாலும் நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது.
பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
அப்படிக் கூறிவிடமுடியாது. எஸ்பி முறையான நடவடிக்கை எடுத்தார். காவல்துறை விசாரணை நடந்தது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மடியில் கனமில்லை என்பதால் இப்போது சிபிஐ விசாரணை நடத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளோம். எந்தக் காலத்திலும் பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அதை அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்வோம்.
திமுகவில் தந்தை கருணாநிதி - தனயன் ஸ்டாலின் என்ன வேறுபாடு?
கருணாநிதி ஒரு பக்குவப்பட்ட, பெரிய அரசியல்வாதி. ஸ்டாலினைப் பொருத்தவரை பக்குவமே இல்லாத முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுக்கும் முதிர்ச்சியற்றவர். அவ்வளவுதான் சொல்லமுடியும்.
சமகால பெண் அரசியல்வாதிகளில் உங்களுக்குப் பிடித்தவர் யார், ஏன்?
நிர்மலா சீதாராமன். அவருடைய தைரியமான பேச்சு, அணுகுமுறை பிடிக்கும். அதேபோல, அவரின் எளிமையும் இடத்துக்குத் தகுந்த வகையில் பேசுவதும் என்னைக் கவர்ந்தவை.
தமிழக அரசியலில்...?
சிரிக்கிறார். என்னையே எனக்குப் பிடிக்கும்.
அடுத்த பெண் முதல்வராவதற்கு யாருக்காவது வாய்ப்புள்ளதா?
அதை ஆண்டவன் முடிவுசெய்வார்.
2011- சட்டப்பேர்வைத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர் பதவியையும் பெற்றீர்கள். அதேவேகத்தில் 2016-ல் போட்டியிட்டபோது ஏன் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது?
1080 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனேன். ஜெயித்துவிடுவேன் என்ற அதீத நம்பிக்கை, சென்னை மழை வெள்ளத்தில் பெரும்பாலான மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது முக்கியக் காரணங்கள்.
நான் தோற்றுவிடுவேன் என்று அப்போது எதிர்பார்க்கவில்லை. இப்போது அதை நினைத்தாலும் மனது வலிக்கிறது. வெள்ளத்தின்போது உயிரைக் கொடுத்து வேலைபார்த்திருந்தாலும் மக்கள் நினைத்துப் பார்க்கவில்லையே என்று யோசிப்பேன்.
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அதிமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. எத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
மக்கள் என்ன முடிவெடுப்பார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆர்.கே.நகரின் வெற்றி, தேர்தலில் தனித்துப் போட்டி என அவரின் அரசியம் நகர்வுகள் வேகமெடுத்துள்ளதே...
டிடிவி எம்.பி.யாக இருந்தபோது நானும் எம்.பி.யாக இருந்தேன். 2001 தேர்தலில் 'அம்மா'வுடன் இருந்தார் டிடிவி. அப்போது அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தினகரன், 'அம்மா' இடத்துக்கு வந்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த எண்ணத்துக்கு விதைபோட்டு, போட்டு வளர்த்த காரணத்தால்தான் இந்த அவசரம் அவருக்கு.
கட்சியின் நலனைவிட சுயநலத்துடன் அவர் செயல்பட்டார். இன்னொன்றையும் இங்கு சொல்ல விரும்புகிறேன். கட்சியின் நடவடிக்கைகளில் டிடிவி தினகரனின் மனைவி பயங்கர ஆதிக்கம் செலுத்தினார். 'அம்மா' இருக்கும்போது, ஜெயா தொலைக்காட்சியை நிர்வகித்தார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவியுடன் அவரும் வந்து அதிகாரம் செய்தார். தேர்தல் வேலைகளில் அனுபவம் கொண்ட எங்களை இது முகம்சுளிக்க வைத்தது. விரும்பத்தகாத செயல்பாடுகளாக அவை இருந்தன. குடும்ப அரசியலுக்கு அடிகோலினார் தினகரன்'' என்றார் கோகுல இந்திரா.
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT