Published : 06 Mar 2019 09:40 AM
Last Updated : 06 Mar 2019 09:40 AM
தம்பிதுரை தொடங்கி தமிழக அமைச்சர்கள் வரையில் யார் என்ன கருத்து சொன்னாலும், “அது அவர்களது சொந்தக் கருத்து” என்று கூறிவிடுகிறார் அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஜெயக்குமார். அப்படிச் சொல்லிவிட முடியாதவரிடம் பேட்டி கண்டால்தானே, அதிமுகவின் உண்மையான கருத்தை அறிய முடியும்? அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனிடம் பேசினேன்.
‘மீண்டும் மோடி’ அல்லது ‘வேண்டாம் மோடி’ இதுதான் இந்தத் தேர்தலின் மையம். அதிமுகவின் முழக்கம் என்ன?
பாஜகவைத் தேசிய முகமாகவும், பாமக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுக்குத் தலைமை தாங்கும் அதிமுகவை மாநில முகமாகவும் கொண்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறோம். ‘மீண்டும் மோடி’ என்று வலியுறுத்துகிற கூட்டணிதான் இது.
‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தை பாஜக கைவிட்டுவிட்டதா அல்லது தமிழகத்தில் தாமரை மலரும் என்பதை அதிமுக ஒப்புக்கொண்டுவிட்டதா?
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் மட்டுமே எந்தக் காலத்துக்கும் மாறாத கருத்தைச் சொல்லவும் பின்பற்றவும் முடியும். தேர்தல் அரசியலில் கூட்டணி என்று வருகிறபோது, முழக்கங்களைத் தள்ளிவைத்துவிட்டு சமரசத்துக்கு ஆட்படத்தான் வேண்டும். 1967-ல் காங்கிரஸை வீழ்த்த, தனது கொள்கை எதிரியான ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி வைத்தார் அல்லவா? அதைப் போல பொது எதிரியான திமுக, காங்கிரஸை வீழ்த்த நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். அதற்காக அதிமுக திராவிடக் கட்சியே இல்லை என்றோ, பாஜக அதன் லட்சியத்தைக் கைவிட்டுவிட்டது என்றோ கருதத் தேவையில்லை.
ஏற்கெனவே மக்கள் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிற அதிமுகவுக்கு, பாஜக கூடுதல் சுமையில்லையா?
ஆளுங்கட்சி என்றாலே மக்களுக்குச் சில வருத்தங்கள், கோபதாபங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஒட்டுமொத்த மக்களும் அதிமுகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிற திமுக, அதேபோல தோற்றுக்கொண்டே இருக்கிற கட்சிகளைச் சுமந்துகொண்டு வருகிறதே... அதுதான் ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’.
முந்தைய தேர்தல்களில் பாஜக தோற்றபோது, தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று குற்றம்சாட்டினார் அமித் ஷா. அவரது விருப்பத்துக்கு மாறாக இம்முறை அதிமுக வாக்காளர்களுக்குப் பணம் தராதுதானே?
தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் ஓட்டுக்கு தலா ரூ.5 பணம் கொடுத்ததோடு, திருப்பதி ஏழுமலையான் படத்தைக் காட்டி சத்தியம் வாங்கியவர்கள் காங்கிரஸ்காரர்கள். திருமங்கலத்தில் ‘இடைத்தேர்தல் ஃபார்முலா’ என்ற பெயரில் அத்தனை பேருக்கும் கச்சிதமாகப் பணம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியது திமுக. எங்களிடம் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். பணம் கொடுக்காமலேயே எங்களால் வெற்றிபெற முடியும்.
தங்களை எதிர்ப்பவர்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட இந்துவாகவே இருந்தாலும் ‘இந்து விரோதி' என்று சொல்வதையும், தேச பக்தராகவே இருந்தாலும் ‘ஆன்டி இண்டியன்' என்று சொல்வதையும் பாஜக வழக்கமாக வைத்திருக்கிறதே?
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட இருவேறு கருத்துகள் இருக்கும். “நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை எனினும் அதைச் சொல்வதற்கான உனது உரிமையைக் காப்பாற்ற எனது உயிரையும் தருவேன்” என்பது வால்டேரின் கூற்று. அண்ணாவும் அந்தக் கண்ணியத்தைக் கடைப்பிடித்தார். அண்ணா வழியில் செல்கிற நாங்கள், பாஜக நண்பர்களுக்குச் சொல்வது ஒன்றுதான். எதிர்க்கட்சியினரின் கருத்தை மென்மையாக எதிர்கொள்வோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT