Published : 21 Mar 2019 04:06 PM
Last Updated : 21 Mar 2019 04:06 PM
அதிமுகவில் ‘சீட்’ கிடைக்காத ‘சிட்டிங்’ எம்பிகளுக்கு மேயர் வாய்ப்பு அல்லது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏ ‘சீட்’டும், மற்ற அதிருப்தியாளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்படும் என சில ‘ஆஃபர்’களை வழங்கி சரிக்கட்டும் நடவடிக்கையில் கட்சித் தலைமை இறங்கி உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் தேனி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. இதிலும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு ‘சீட்’ கொடுக்காமல் திமுகவை போல் அதிமுகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு தலைமை ‘சீட்’ வழங்கி உள்ளது. திருநெல்வேலியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டி யனுக்கும், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாருக்கும், மதுரையில் முன்னாள் மேயரும், வடக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யனுக்கும் ‘சீட்’ கிடைத்துள்ளது.
உட்கட்சிப் பூசல் காரணமாக வெற்றிவாய்ப்புள்ள சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக விட்டுக் கொடுத்துள்ளது. அமைச்சர்கள், தலைவர்களின் உள்ளடி வேலையால் தென் மாவட்டத்தில் அதிமுக, குறைந்த தொகுதியில் போட்டியிடுகிறது. அதிலும் முழுக்க முழுக்க வாரிசுகளுக்கே ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளதால் வாய்ப்பு கிடைக்காத ‘சிட்டிங்’ எம்பிக்கள், சீட்டுக்காக அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் மூலம் காய் நகர்த்திய மாவட்ட நிர்வாகிகள் பலரும் விரக்தியடைந்துள்ளனர்.
யார் வேண்டுமென்றாலும் வேட்பாளராகலாம் என்ற ஜெயலலிதாவின் பார்முலா கைவிடப் பட்டதால் இனி அதிமுகவில் சாமானியர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமம் என்ற நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள், தற்போது வரை வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறாவிட்டாலும் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். மாறாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக குழி பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை அதிமுக மேலிடத்தை எச்சரித் துள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் ‘சீட்’ பெற சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வத்தையே முழுமையாக நம்பி யிருந்தார். ஆனால், அவரோ கடைசி நேரத்தில் மகனுக்கு மட்டும் தேனியில் ‘சீட்’ வாங்கிக் கொடுத்துவிட்டு கோபாலகிருஷ்ணனை கைவிட்டுவிட்டார். கோபாலகிருஷ்ணனால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியா விட்டாலும் ‘சீட்’ கிடைக்காத விரக்தியை வெளியே காட்டிக் கொள்ளாமல் நேற்று அலங் காநல்லூர் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபோது அவரை பொறுமை காக்கும்படி கூறியுள்ளார்.
இதுபோல், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தீவிர ஆதரவாளரான கிரம்மர் சுரேஷ் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைப்பது முதல், கூட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது வரை கடுமையாக உழைத்தவர். இவருக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ‘சீட்’ வாங்கிக் கொடுக்காமல் எதிர் அணியாகச் செயல்பட்ட வி.வி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனுக்கு ‘சீட்’ கொடுக்க தலைமையிடம் பரிந்துரை த்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோல், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தொகுதிகளில் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியும், கட்சித் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட விரக்தியும் அதிமுக நிர்வாகிகளிடம் உள்ளது. இந்த நிர்வாகிகளை சமாதானப்படுத்த உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சீட் கிடைக்காத சிட்டிங் எம்பிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மேயர் ‘சீட்’ அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏ ‘சீட்’ வாய்ப்பு தருவதாக உறுதி கொடுக்கின்றனர். மற்ற நிர்வாகிகளுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப உள்ளாட்சி தேர்தலில் முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிடும் வாய்ப்பு தரப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
ஆனால், அதிருப்தியாளர்கள், அதை நம்பத் தயாராக இல்லை. அப்போதும் உள்ளூர் அமைச்சர்கள், தங்களுக்கு ‘சீட்’ தர மாட்டார்கள். மதுரை மாவட்டத்தில் அமைச்சர்களுக்கே கட்சித் தலைமை முக்கியத்துவம் கொடுப்பதால் அதிமுக நிர்வாகிகள் சிலர் திமுக பக்கம் தாவலாமா? என்ற யோசனையில் உள்ளனர். அவர்களைச் சமரசம் செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT