Last Updated : 22 Mar, 2019 09:13 AM

 

Published : 22 Mar 2019 09:13 AM
Last Updated : 22 Mar 2019 09:13 AM

‘ஆசார்ய’ கிருபளானி: சமரசமற்ற ஆசான்

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி, பிஹார் மாநிலத்தின் சம்பராண் மாவட்டத்தில், 1917-ல் விவசாயிகளுக்கு ஆதரவாக சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரைச் சந்தித்தார் அந்த மனிதர். காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் காந்தி நிறுவிய ஆசிரமங்களில் கல்வி போதிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர்தான் பின்னாளில் ‘ஆசார்ய’ (ஆசிரியர்) எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஆசார்ய கிருபளானி.

காந்தியின் வழிகாட்டலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 1928-29-ல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளரானார். நாடு சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் அவர்தான். பல்வேறு காரணங்களால் கட்சியிலிருந்து வெளியேறி ‘கிஸான் மஸ்தூர் பிரஜா’ என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு, அதை ஜெயபிரகாஷ் நாராயண், ஆசார்ய நரேந்திர தேவ், பஸவான் சிங் நடத்திய ‘இந்திய சோஷலிஸ்ட் கட்சி’யுடன் இணைத்தார். புதிய கட்சி ‘பிரஜா சோஷலிஸ்ட்’ கட்சியானது.

1952, 1957, 1962, 1967 தேர்தல்களில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் சீன ஆக்கிரமிப்பு நடந்தபோது கிருபளானி மிகவும் மனம் வருந்தினார். தேசப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிட்டதாக நேரு தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்டது அப்போதுதான். பூதான இயக்கத் தலைவர் வினோபா பாவேயுடன் இணைந்து நாடு முழுக்கச் சுற்றுப் பயணம் செய்தார். நேருவை விமர்சித்ததைப் போலவே இந்திராவையும் கடுமையாக விமர்சித்தார். 1975-ல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டார் கிருபளானி. 90 வயதைக் கடந்த அவர் சிறைவாசம் அனுபவித்தார். 1977-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில், ஜனதா அரசு அமைவதைப் பார்த்தார். உடல்நலம் குன்றியது. காங்கிரஸ் அல்லாத அந்த முதல் அரசு கவிழ்ந்ததையும் பார்த்துவிட்டார். 1982 மார்ச் 19-ல் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் தனது 93-வது வயதில் காலமானார்.

அவருடைய மனைவி சுசேதா 1938 முதல் காங்கிரஸிலேயே நீடித்தார். 1963-1967 காலத்தில் உத்தர பிரதேச முதலமைச்சராகவும் பதவி வகித்தார். இந்தியாவின் முதல் பெண் முதல்வர் அவர்தான். கணவர் – மனைவி இருவரும் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலங்களில் இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதங்கள் நடந்ததுண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x