Published : 12 Mar 2019 11:18 AM
Last Updated : 12 Mar 2019 11:18 AM
தமிழ்நாட்டின் மையப் பகுதியி லுள்ள திருச்சி மீது அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வ ருமான எம்.ஜி.ஆருக்கு தீராத பற்றுண்டு. எனவேதான், உறையூர் பகுதியில் தனக்கென ஒரு பங்களாவை வாங்கியதுடன், திருச்சியை மாநிலத்தின் தலைந கராகவும் மாற்ற முயற்சி செய்தார்.
எம்ஜிஆரைப் போலவே, அக்கட்சியின் அடுத்த தலைமை யான ஜெயலலிதாவுக்கும் திருச்சி மிகவும் பிடித்தமான ஊராக விளங்கியது. தனது பூர்வீகம் இங்குள்ள ஸ்ரீரங்கம்தான் என்பதைச் சுட்டிக்காட்டி, 2011-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார்.
கட்சியின் தலைமைகளுக்கு பிடித்தமான இடமாக இருந்த போதிலும், கடந்த காலங்களில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக பெரும்பாலும் ஆர்வம் காட்டியதில்லை. காங்கிரஸ், பாஜக என கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கீடு செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 2001-ல் ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்ததால் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தலித் எழில்மலை, பாஜக வேட்பாளர் சுகுமாறன் நம்பியாரை வீழ்த்தி, அதிமுகவின் வெற்றிக் கணக்கை தொடங்கினார்.
எனினும் அதற்கடுத்து 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, மதிமுக வேட்பாளர் எல்.கணேசனிடம் 2,16,725 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து, தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.குமார், காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2009-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ப.குமார், திமுக வேட்பாளர் மு.அன்பழகனை விட 1,50,476 வாக்குகள் அதிகம் பெற்று தொகுதியைத் தக்க வைத்தார். இதன்மூலம் திருச்சி தொகுதி அதிமுகவின் கோட்டையாக மாறி வருவதாக அக்கட்சியினர் பெருமையாக கூறி வந்தனர்.
இச்சூழலில், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக இங்கு போட்டியிட கட்சியினரிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. தற்போதைய எம்.பி ப.குமார், புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏக்கள் கார்த்திக் தொண்டைமான், நெடுஞ்செழியன் உட்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களுக்கு இன்று(மார்ச் 12) நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கிடையே திருச்சி தொகுதியை, கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி கள் சிலர் கூறியபோது, “திருச்சி தொகுதியில் அதிமுகவுக்கு வலுவான உட்கட்டமைப்பு உண்டு. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் தொடர்ந்து 3-வது முறையாக வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இங்கு மாவட்டச் செயலாளராக உள்ள எம்.பி ப.குமாருக்கும், அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி ஆகியோருக்கும் ஒருமித்த கருத்து இல்லாத சூழல் காணப்பட்டது. அதேபோல இத்தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிமுகவினரிடம் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதல்வர் ஓபிஎஸ் என இரு குழுவாக செயல்பட்டு வரு கின்றனர்.
எனவே, ப.குமாரை மீண்டும் நிறுத்தினால் அவருக்காக அமைச்சர்கள் மற்றும் புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சிலர் வேலை செய்வது சந்தேகம்தான் என்ற நிலை இருந்து வந்தது. மேலும், வேறு வேட்பாளரை தேர்வு செய்வது, அனைவரையும் ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டே திருச்சியை தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்க அதிமுக தலைமை முன் வந்திருக்கலாம் என கருதுகிறோம். எனினும், தொகுதி யாருக்கு என்பது குறித்த இறுதியான அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT