Published : 25 Mar 2019 12:47 PM
Last Updated : 25 Mar 2019 12:47 PM

நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை போன்ற அதிமுகவின் வாக்குறுதிகள் பசப்பு நாடகம்: இரா.முத்தரசன் விமர்சனம்

அதிமுகவின் 'நீட்' தேர்வு ரத்து, எழுவர் விடுதலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் பசப்பு நாடகம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக இணைப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல பொய் வரலாறுகளையும், பொய் வாக்குறுதிகளையும் வாரி இரைத்துள்ளது. 'ஏழு தமிழர்கள்' விடுதலைக்காக மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ஏழு தமிழர்களின் விடுதலையில் அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொண்டுவரப்பட்ட, சட்டப்பேரவை தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிய பிறகும், தமிழக அமைச்சரவை ஏழு பேரையும், விடுவிக்க ஒப்புதல் தெரிவித்த பிறகும், உச்ச நீதிமன்றமே வழிகாட்டிய பிறகும், மாநில ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும், மத்திய அரசு இவ்விஷயத்தில் கனத்த மவுனமாக இருப்பதையும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அதேபோன்று, 'நீட்' தேர்வு வேண்டாம் என அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டப்பேரவை தீர்மானமும் கிடப்பில் உள்ளது. இதற்கும் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு தற்போது தேர்தல் நேரத்தில் பசப்பு நாடகம் ஆடுவதை தமிழக வாக்காளர்கள் அறிந்தே வைத்துள்ளனர்" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x