Published : 14 Mar 2019 10:13 AM
Last Updated : 14 Mar 2019 10:13 AM

முக்கியத்துவம் இழக்கிறதா முஸ்லிம் வாக்கு வங்கி?

அண்டை மாநிலமான கேரளத்தைவிட தமிழகத்தில் இரண்டு மடங்கு முஸ்லிம்கள் உண்டு. என்றாலும், அம்மாநிலத்தைப் போல தமிழக தேர்தல் களத்தில் முஸ்லிம்களால் அழுத்தமான முத்திரையைப் பதிக்க முடியவில்லை. தொகுதிப் பங்கீடுகளில் பிரதானக் கட்சிகள் ‘பெரிய மனதோடு’ கொடுப்பதை பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே முஸ்லிம் அமைப்புகள் உள்ளன.

கேரளத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அடர்த்தியாக இருப்பதும், தமிழகத்தில் அப்படி அல்லாமல் அந்த சமூகத்தினர் பரவலாக வசித்துவருவதுமே இதற்கு முக்கிய காரணம் எனலாம். அதேநேரத்தில், அரசியல்ரீதியாக வேறு பல காரணங்களும் உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முஸ்லிம்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகள், நீண்டகாலமாக இந்த முஸ்லிம் வாக்கு வங்கிக்கு முக்கியத்துவம் அளித்துவந்தன. எனினும், அண்மைக்காலமாக இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறையும் செல்வாக்கு

அரசியல் அரங்கில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ என ஏராளமான இயக்கங்கள் உள்ளன. இவை தவிர பெரும் எண்ணிக்கையிலான ‘லெட்டர் பேடு’ அமைப்புகளும் உண்டு. நெல்லிக்காய் மூட்டையாக முஸ்லிம் அமைப்புகள் இப்படி சிதறிக்கிடப்பதால், திராவிடக் கட்சிகள் இப்போது அவற்றைப் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே முஸ்லிம்கள் அந்தக் கட்சிக்குத்தான் தீவிர ஆதரவு அளித்துவந்திருக்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு, அப்போது ஆட்சியிலிருந்த திமுகவை ஆதரிப்பதில் மாற்றம் ஏற்பட்டது. எனினும், தற்போது பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளதால், ஜெயலலிதா காலத்தைப் போன்று அந்தக் கட்சிக்கு கணிசமான அளவுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அதேநேரம், முஸ்லிம்களின் வாக்குகளை முழுமையாகப் பெறுவதற்கான முயற்சியில் திமுக, காங்கிரஸ் தரப்பிலும் பெரியளவில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. எதிரணியில் பாஜக உள்ளதால் முஸ்லிம்களின் வாக்குகள் தானாகவே தங்கள் பக்கம் வரும் என்கிற நம்பிக்கையில் இந்தக் கட்சிகள் இருக்கின்றன.

ஆரம்ப காலம் முதல் தங்களது கூட்டணியில் தொடர்ந்துவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கையும் பத்தோடு பதினொன்றாகத்தான் திமுக அணுகிவருகிறது. முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த காயிதே மில்லத்தும் முகமது கோயாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆற்றிய பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மதம், கட்சி எல்லைகளைக் கடந்து தேசிய நோக்கில் இவர்கள் முன்னெடுத்துவைத்த வாதங்கள், என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.

மக்களவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, சமீபகாலமாகவே தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒற்றை இடம்தான் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், அந்த ஒற்றை இடத்திலும் யாரை நிறுத்துவது என்பதை திமுகவே தீர்மானிக்கிறது. முன்பு வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரஹ்மானை களமிறக்கிய துரைமுருகன், இந்த முறை ராமநாதபுரத்தில் தனக்கு வேண்டிய ஒரு தொழிலதிபரை முஸ்லிம் லீக் வேட்பாளராக நிறுத்தப்போகிறார் என்று பேசப்படுகிறது. நாடு விடுதலை பெற்ற காலம்தொட்டு தற்போது வரையில் முஸ்லிம்களின் தேசிய அளவிலான பிரச்சினைகள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தமான வாதங்களை பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த அறிவார்ந்த தொடர்ச்சி அறுபட்டுவிடக் கூடாது என்பதுதான் முஸ்லிம் சமூகத்தவரின் எதிர்பார்ப்பு.

இதயத்தில் மட்டுமே இடம்

மற்றொரு குறிப்பிடத்தக்க முஸ்லிம் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக இந்த முறை இதயத்தில் மட்டுமே இடமளித்துள்ளது. இதன் காரணமாக அந்த அமைப்புக்குள் கொந்தளிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் வேறு வழியின்றி கள எதார்த்தத்தைக் கருத்தில்கொண்டு திமுகவை ஆதரிப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தலைமை இவ்வாறு அறிவித்தாலும் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி தொடர்கிறது.

இன்னொரு பக்கம் தமிழ் மாநில முஸ்லிம் லீக், கடந்த ஓராண்டு காலமாக டி.டி.வி.தினகரனை ஆதரித்துவந்த நிலையில், தற்போது அதிமுகவின் பக்கம் சாய்ந்துள்ளது. அதற்காக, “மோடியை யாரும் விமர்சிக்க வேண்டாம், அவரது ஆட்சியால்தான் இந்தியா வல்லரசாக முடியும்” என்று அக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் பேசிவருவதை முஸ்லிம்கள் ரசிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு இழைக்கும் துரோகமாகவே இந்தப் பேச்சைப் பார்க்கிறார்கள்.

பல தளங்களிலும் பாஜகவைத் தொடர்ந்து எதிர்த்துவரும் தினகரனுக்கும் இஸ்லாமிய இளைஞர்களிடையே ஆதரவு இருக்கிறது. அதை தினகரனால் வாக்குகளாக அறுவடை செய்ய முடியுமா என்பதற்கு எந்த உறுதியுமில்லை. இத்தகைய சூழலில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிதற வாய்ப்புள்ளது.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அதிக இடங்கள் கொடுத்தால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைக்காது என்கிற தவறான கருத்து அண்மைக்காலமாகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவருகிறது. எடுத்ததெற்கெல்லாம் போராட்டம் என கொடிபிடிக்கும் சில இஸ்லாமிய அமைப்புகளின் அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணம். எது எப்படியிருந்தாலும், தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருந்தும்கூட அரசியல் அரங்கில் ஆளுமை செலுத்தும் சக்தியை முஸ்லிம் சமூகம் இழந்திருப்பது ஒரு பெரும்சோகம்!

- புதுமடம் ஜாபர் அலி,

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x