Published : 04 Mar 2019 12:14 PM
Last Updated : 04 Mar 2019 12:14 PM

உதயசூரியனா அல்லது தனிச்சின்னமா? - எந்த சின்னத்தில் போட்டியிடும் ? - திருமாவளவன் பதில்

தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (திங்கள்கிழமை) அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொல் .திருமாவளவன் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார்.

அதில், "நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் இன்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில் விசிக 2 நாடாளுமன்ற தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுஃப் ஆகியோரும், திமுக சார்பாக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்", என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து விசிக எந்த சின்னத்தில் போட்டியிடும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் சின்னம் குறித்தும் விசிக முன்னணி பொறுப்பாளர்களுடனும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவினருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

ஏற்கெனவே பல தேர்தல்களில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. கூட்டணி நலன் குறித்து இந்த தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்" என்றார், தொல்.திருமாவளவன்.

தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என திருமாவளவன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x