Published : 19 Mar 2019 01:29 PM
Last Updated : 19 Mar 2019 01:29 PM

மோடியைக் காப்பியடிக்கும் ஸ்டாலின்: தமிழிசை கிண்டல்

தேர்தல் அறிக்கையில் மோடியின் திட்டங்களைக் காப்பியடிக்கும் ஸ்டாலின் நினைவாற்றலோடு இருக்கிறாரா என்று தமிழிசை கிண்டல்செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, ''மத்திய அரசின் முத்ரா வங்கி தமிழகப் பெண்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றியுள்ளது. ரூ.50 ஆயிரம் மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பல்லாண்டுகளாக மத்திய அரசால் கொடுக்கப்படும் கடன் போல, பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அதுபோல ஏராளமான அறிவிப்புகள் தவறுதலாக உள்ளன. கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அங்கு நான்காவது முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் தமிழகத்தில்தான் இருக்கிறாரா என்பதோடு நினைவாற்றலோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.

அடுத்ததாக நீட் தேர்வு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர் எப்படிப் புத்துயிர் கொடுக்க நினைக்க முடியும்? ஏதோ மக்களுக்குச் சொல்வோம், சட்டரீதியில் அது நடைமுறைப்படுத்த முடியுமா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறார் போல.

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை முற்றிலும் பொய்யானது. ஏற்கெனவே மத்திய அரசு நடத்துவதை, இல்லை என்று சொல்லும் அறிக்கையாக அமைந்துள்ளது. இதை மக்கள் நிச்சயமாக நம்பப் போவதில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை மாய அறிக்கையாக உள்ளது.

நல்ல திட்டங்களைக் கொடுத்து வருகிறார் மோடி. அதிமுக அறிக்கையில், உதவித்தொகைகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையிலும், 5 முறை தமிழகத்தையும் ஆண்ட அவர்கள் (திமுக) ஏன் எதையும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு, இனி இதையெல்லாம் செய்வோம் என்பதைச் சொல்லுங்கள்.

அப்போதெல்லாம் மறந்துவிட்டோம்; மோடியைப் பார்த்துத்தான் வளர்ச்சித் திட்டத்தைக் கற்றுக்கொண்டோம், அதனால்தான் இப்போது இந்த யோசனைகள் வந்தன என்று சொல்லுங்கள். அதை ஒப்புக்கொள்கிறேன்'' என்றார் தமிழிசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x