Published : 04 Mar 2019 08:31 PM
Last Updated : 04 Mar 2019 08:31 PM

கவுண்டர்கள் மயமாகிறதா கொங்கு மண்டல அதிமுக?

கொங்கு மண்டலத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பத்து தொகுதிகள் உள்ளன. 2004 தேர்தலில் அத்தனையையும் கூட்டணி பலத்துடன் வென்றெடுத்த திமுக 2009-ல் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 2014 தேர்தலில் அத்தனையிலும் தோல்வியைத் தழுவியது. 2001 -ல் தொடங்கி 2006, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களும் அதிமுகவிற்கு தொடர் வெற்றிகளைத் தர கொங்கு மண்டலமே அதிமுகவின் கோட்டையாகத் திகழ்கிறது.

இம்மண்டலத்தில் பெரும்பான்மை சாதியினராக கவுண்டர்களும், அடுத்த நிலையில் அருந்ததியர்களும் இருக்கிறார்கள். கவுண்டர்கள் அதிமுகவில் மட்டுமல்ல, திமுக, தேமுதிக, பாஜக, கொமதேக என இதர கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மை தொகுதிகளில் கவுண்டர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். கவுண்டர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அருந்தியர்கள் அதிமுகவிலேயே பெரும்பான்மையாக உள்ளதால்  அதிமுக கவுண்டர் வேட்பாளர்களே வெல்வது இங்கே சுலபமாகியிருக்கிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல் மற்ற கட்சித் தலைவர்களும் கூட  திமுகவின் தொடர் தோல்விக்கு அதிமுகவில் பெருவாரியாக உள்ள அருந்ததியர் சமூகம்தான் என்பதை அடிக்கடி வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். இப்படியான சூழலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவால் இரு அணியிலும் இச்சமூகங்களுக்கான வாக்கு வங்கி இப்போது எப்படியிருக்கிறது என்பதைக் கணிக்க முடியவில்லை..

இருந்தாலும் ஜெயலலிதாவின் இறப்பு அதிமுகவைப் பெருமளவு பாதித்திருந்தது. தினகரன், சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களின் நடைமுறைப் போக்குகளை மக்கள் எள்ளளவும் ரசிக்கவில்லை. ஆட்சியாளர்களின் மீது மக்களிடம் உள்ள வெறுப்புணர்வு எந்த நேரம் தேர்தல் நடந்தாலும் திமுகதான் வெற்றி வாகை சூடும்; அதனாலேயே உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்தாமல் இருக்கிறார்கள் என்று அதிமுகவினரே பேசிக்கொள்வது சமீபகாலமாக சகஜமாக இருந்து வந்தது.

மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க இந்நிலை மாறிக் கொண்டிருக்கிறது. வாரத்திற்கு ஓரிரு முறையாவது தன் சொந்த ஊருக்கு வரும் முதல்வர் பழனிசாமி கோவை வராமலோ, ஒரு விழாவில் பங்கேற்காமலோ செல்வதில்லை. அப்போதெல்லாம் அவரை மொய்ப்பது கட்சிக் கவுண்டர்கள் மட்டுமல்லாது வெவ்வேறு கட்சிகளை, அமைப்புகளைச் சேர்ந்த கவுண்டர்கள்.  உதாரணமாக கடந்த பிப்ரவரி 6-ம் தேதி கோவை வையம்பாளையத்தில்  மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி மணி மண்டபத்திறப்பு விழாவில் பங்கேற்றார் முதல்வர். அதில் 90 சதவீதம் வெவ்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்ந்த கவுண்டரின விவசாயிகளே காணப்பட்டனர்.

இதைப் பற்றி பேசிய கவுண்டர் சமூகம் அல்லாத அதிமுகவினர் சிலர், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் காலத்தில் இல்லாத அளவு கவுண்டர்களின் சாதி உணர்வை இப்போது எங்கள் கட்சிக்குள்ளேயே காண்கிறோம். எதிரும் புதிருமாய் இருந்து அரசியல் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் கூட இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் (இவர்களும் கவுண்டர்கள்தான்) கூடிக் குலாவி, ஒரே காரில் செல்வதை, ஒன்றாகவே முதல்வரைச் சந்திப்பதைப் பார்க்கிறோம்.

மற்றவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். அரசுப் பணிகளில், உள்ளாட்சி, கூட்டுறவு சொஸைட்டிகளில் காலிப்பணியிடம் காணப்பட்டால் அதில் முதலில் நிரப்பப்படுவது கவுண்டர் பையனாக இருக்கட்டும் என்பது அதிகாரிகளுக்கு எழுதப்படாத உத்தரவாக இருக்கிறது. மாற்றுக் கட்சி கவுண்டர்களும் கூட கவுண்டர் அமைச்சர்களைப் பார்த்துச் செல்வதைப் பார்க்கிறோம். அப்படியும் வரமுடியாத திமுக, காங்கிரஸ் கட்சி கவுண்டர் விஐபிகள் தனக்கான தொழில்முறை காரியங்கள் செய்து கொள்ள தூதுவர்கள் வைத்துள்ளார்கள். கோவையில் சில மடங்களும், மடாதிபதிகளும் பெரிய மருத்துவமனையை நடத்தும் கவுண்டர் செல்வந்தர்கள் இவர்களுக்குப் பாலமாக இருக்கிறார்கள்.  இவர்களின் ஒருமித்த குறிக்கோள் தம் சமூகத்தவரான முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவதும், அவர் ஆட்சியை தக்க வைப்பதும்தான்!’’ என்றனர்.

கவுண்டர்கள் லாபி ஒரு பக்கம் இப்படி. இன்னொரு பக்கம் தேர்தலுக்கு வாக்குசாவடி அளவிலும் பணிகள் பலமாக முடுக்கி விடப்பட்டிருப்பது அதிமுகவில்தான். ஒரு வாக்குசாவடிக்கு 24 பேர், 12 பேர், 6 பேர் வீதம் 3 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் குழுவில் உள்ள 24 பேர்  தினசரி அந்தந்தப் பகுதி வாக்காளர்கள் 50 பேரைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஒரு கண்கவர் ஃபைல் கொடுக்கப்படுகிறது. அதில் ஏற்கெனவே உள்ள எம்.எல்.ஏ செய்த சாதனைகள், வேலைகள் பட்டியலிடப்பட்டு நோட்டீஸ்களும், கூடவே ஒரு பேனாவும், விண்ணப்பமும் வைக்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள விண்ணப்பத்திலேயே குறை நிறைகள், போன் எண், முகவரி எல்லாம் எழுதித் தர வேண்டும். இப்படி அவர்கள் செய்யும் அன்றாடப் பணியின் மூலம் வாக்காளர்களில் எத்தனை பேர் அதிமுகவிற்கு வாக்களிக்கும் மூடில் உள்ளவர்கள், எத்தனை பேர் ஊசலாட்டத்தில் உள்ளவர்கள், அவர்கள் வாக்குக்கு பணம் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பன போன்ற பல்ஸ் பார்க்கப்படுகிறது.  அடுத்த குழுவான 12 பேர் முதல் குழு சொல்வது சரியானதுதானா? என கண்டறிந்து பட்டியலில் டிக் செய்வதும், கணினியில் பதிவேற்றுவதும்தான் வேலை. கடைசியாக உள்ள 6 பேர் குழு தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பு பணப்பட்டுவாடா செய்வதுதான் திட்டமாம்.

‘‘ஒரு வாக்குக்கு 3 ஆயிரம் ரூபாய். ஒரு கோடி வாக்குக்கு 3 ஆயிரம் கோடி. இதைச் செய்தால்  வெற்றி உறுதி என்பதே கணக்கு. இந்தப் பணிகள் அந்தந்த மாவட்ட அமைச்சர்களால் முடுக்கி விடப்பட்டு 10 தொகுதிகளிலும்  6 மாதங்களாக நடக்கிறது. திமுகவிலோ தேர்தல் வேலைக்கான சுவடே காணோம். அப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்றே தெரியவில்லை. ‘எப்போ தேர்தல் வரும், எப்போ கைக்கு காசு கிடைக்கும்?’ என்ற ஏக்கம் வாக்காளர்களிடம் இருப்பதை எங்களால் கண்கூடாகக் காண முடிகிறது.  அந்த ஏக்கமும், கட்சிக்குள் நிறையும்  உணர்வும், கட்சி மற்றும் இரட்டை இலை பலமும் எங்களை பத்து தொகுதிகளிலும் ஜெயிக்க வைக்கும். இது திமுக ஸ்டாலினுக்கும் தெரிந்திருக்கிறது. எனவே அவர் நீலகிரி ஒரு தொகுதியை மட்டும் ஆ.ராசாவுக்காக வைத்துக் கொண்டு மீதி 9 தொகுதிகளை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக என கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து விட முடிவு செய்து விட்டாராம்!’’

என்று தெரிவித்தார் பெயர் சொல்ல விரும்பாத மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர்.

 

‘‘தூக்கிப் போடப்பட்ட சர்வே!’’

இதைப் பற்றி திமுக தரப்பில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவரிடமே பேசினோம்:

‘‘அதிமுகவில் பெயரளவுக்குத்தான் பூத் ஏஜென்ட் போட்டு 24 பேர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து அக்கட்சித் தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்போ கட்சியில் பணம் வரும்; அமுக்கிக் கொள்ளலாம்னு காத்திருக்காங்க. மற்றபடி எங்க திமுகவில்தான் ஊராட்சி தோறும் போயிட்டிருக்கிறோம். கிராமங்கள் பூராவும் எங்களுக்குப் பலமா இருக்கு. இப்ப எங்க தலைவர் ஸ்டாலின் எடுத்த ரகசிய சர்வேபடி கொங்கு மண்டலத்தில் திமுக நின்றால்தான் ஜெயிக்க முடியும். கூட்டணிக் கட்சிகள் நிறுத்தினால் தோல்வியையே தழுவும்னு 10 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களையே நிறுத்த முடிவு செய்திருந்தார். ஆனால் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குழப்பம். பாமக அதிமுக அணியுடன் சேர்ந்து கொண்டது. அதனால் காங்கிரஸிற்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், விடுதலை சிறுத்தைக்கும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய கட்டாயம். கொமதேகவை இங்கே சேர்க்க வேண்டிய நிர்பந்தம் போன்ற காரணங்களால் அந்த சர்வேயையே தலைவர் தூக்கி தூரப் போட்டுவிட்டார்!’’ என்று தெரிவித்தார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x