Published : 20 Mar 2019 10:18 AM
Last Updated : 20 Mar 2019 10:18 AM

இதுதான் இந்தத் தொகுதி: அரக்கோணம்

கிபி 949-ல் தக்கோலத்தில் சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் இடையிலான போரில் சோழர் படைக்குத் தலைமை தாங்கிய ராஜாதித்தர் கொல்லப்பட்டார். சோழர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்திய இந்தப் போர் நடந்த தக்கோலம் தற்போது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழமையான ஊராக இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலும் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன. 1977-ல் தொடங்கப்பட்ட அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

பொருளாதாரத்தின் திசை: வேளாண் மற்றும் தொழில் துறையைப் பின்னணியாகக் கொண்ட தொகுதி அரக்கோணம். பாலாறு, கொசஸ்தலை ஆறு, பொன்னை ஆறு உள்ளிட்டவற்றால் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. விசைத்தறித் தொழில், தோல் தொழில், சிட்கோ, சிப்காட் வளாகங்கள் இங்கு உண்டு. ராம்கோ, எம்ஆர்எப், டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட், மிட்சுபிஷி போன்ற முன்னணி நிறுவனங்கள் மூலம் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைக் பெற்றுள்ளனர்.  ராணிப்பேட்டையில் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற ‘பெல்’ தொழிற்சாலை இருக்கிறது. இஐடி பேரி தொழிற்சாலை உண்டு. சர்வதேச அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 12%. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 60%. இதில் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, மேல்விஷாரம் ஆகிய நகரங்கள் முக்கிய இடம்பெறுகின்றன.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகத் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னைக்குச் சென்றுவருகின்றனர். இவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில்; அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதுதான். ரயில் சேவை தொடர்பாக நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு இந்த முறை அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மோசமான சாலைகள், குடிநீர்ப் பிரச்சினை போன்றவை தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும்.

நீண்டகாலக் கோரிக்கைகள்: அரக்கோணம் ரயில் முனையம் ஏற்படுத்த வேண்டும்; அரக்கோணம் - சென்னை இடையிலான மூன்றாவது நான்காவது ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் குரல்கள் ஒலிக்கின்றன. பாலாறு மாசடையக் காரணமாக இருக்கும் ராணிப்பேட்டை குரோமிய தொழிற்சாலையில் தேங்கியுள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது இன்னொரு முக்கியக் கோரிக்கை.

ராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்க சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிவருகிறார்கள். வேலூர், திருத்தணி பகுதிகளில் விளையும் மாம்பழங்களுக்கு ஆந்திரம் விதித்திருக்கும் தடை, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடையை மீறிக் கட்டிவரும் தடுப்பணை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நிற்கிறார்கள் மக்கள்.  கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் காலம் கடத்தப்படுகிறது. நிலுவைத் தொகையை எப்போது வழங்குவீர்கள் என்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் ஒலிக்கும் கேள்விகள் மக்களவைத் தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.

ஒரு சுவாரஸ்யம்: ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக 1866-ல் வாலாஜாபேட்டை நகராட்சி தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஜூலை 1-ல் சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜா ரோடு வரை இயக்கப்பட்டது. அரக்கோணம் மக்களவை தொகுதியில் வாலாஜா ரோடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய ரயில் வரலாற்றில் இடம்பெற்ற பெருமை அரக்கோணத்துக்கு உண்டு. பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு, மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்தது ஒரு தற்செயல் சுவாரஸ்யம்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர்கள் 26%, பட்டியலினத்தவர் 24%, முதலியார்கள் 14%, நாயுடு சமூகத்தினர் 8%. வன்னியர்களின் பெரும்பான்மை வாக்குகள் பாமகவுக்குச் சாதகமாக இருக்கலாம். சமுதாயம் சார்ந்த கட்சிரீதியாகவும், திமுக, அதிமுக என்று கட்சிரீதியாகவும் பட்டியலினத்தவர்களின் வாக்குகள் பிரிந்து கிடக்கின்றன.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நான்கு முறையும், இந்திரா காங்கிரஸ் கட்சியும் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. அதிமுக, திமுகவினர் தலா இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளனர். பாமக ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. தொடக்கத்தில் முதலியார்கள் வெற்றிபெற்றனர். சமீபகாலத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் வன்னியர்கள்.

வாக்காளர்கள் யார்?

மொத்தம்: 14,79,961

ஆண்கள்: 7,24,688

பெண்கள்: 7,55,199

மக்கள்தொகை எப்படி?

மொத்தம் 23,31,777

ஆண்கள் 11,62,238

பெண்கள் 11,69,539

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 79%

ஆண்கள் 11,62,238

கிறிஸ்தவர்கள்: 13%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 78.5%

ஆண்கள் 85%

ஆண்கள் 85%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x