Published : 29 Mar 2019 08:15 AM
Last Updated : 29 Mar 2019 08:15 AM
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டும் நிலையில், முதன் முறையாக களமிறங்கும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அமைதியாக இருப்பதால் அந்தக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருச்சி தொகுதியில் போட்டியிட தனிப்பட்ட முறையிலும் கமல்ஹாசனே நிற்க வேண்டும் என்றும் 50 விருப்ப மனுக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கடந்த 20-ம் தேதி வெளியிட்டார். இதில், திருச்சி தொகுதி வேட்பாளராக வி.ஆனந்தராஜா அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஆனந்தராஜ், அதன்பின்னர், இதுவரை பிரச்சாரத்தைத் தொடங்காததால், அவர் எப்போது பிரச்சாரத்தை தொடங்குவார் என காத்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் கூறியது: மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர்கூட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியைத் தொடங்கி விட்டார். கட்சி சின்னமே இதுவரை கிடைக்காத அமமுக வேட்பாளர் சாருபாலா தொகுதியில் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், எங்கள் கட்சி வேட்பாளர், ஏனோ அமைதியாகவே உள்ளார்.
கட்சித் தலைமையின் அறிவுரையின்பேரில், அந்தந்த தொகுதி, பகுதி பொறுப்பாளர்கள் இயன்ற அளவில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ள நிலையில், அதை வாக்குகளாக அறுவடை செய்ய வேட்பாளர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அவசியம்" என்றனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.ஆனந்தராஜாவிடம் கேட்டபோது, "கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டேன். உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல்களைக் காட்டிலும் மக்களவைத் தேர்தல் களப் பணி என்பது எளிதல்ல. தேர்தல் களத்துக்கு எங்கள் ஆட்கள் புதியவர்கள். சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், கட்சிக் கொடிகள் இன்னும் வர வேண்டியுள்ளது. தேர்தல் களப் பணியை மிகச் சரியாக செய்ய வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என்பதோ, கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக கூறுவதோ சரியல்ல. வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியானவுடன் ஏப்.1-ம் தேதிக்கு பிறகுதான் தேர்தல் களம் சூடுபிடிக்கும். திருச்சியில் மார்ச் 29-ம் தேதி (இன்று) வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகம் திறக்கப்படும். படிப்படியாக தேர்தல் பணிகளைத் தீவிரமாகும். எங்கள் கட்சித் தலைவர் திருச்சியில் மேற்கொள்ளும் பிரச்சாரம் எனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT