Published : 29 Mar 2019 02:22 PM
Last Updated : 29 Mar 2019 02:22 PM

எஞ்சியுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக அறிவித்திடுக: இரா.முத்தரசன்

தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக அறிவித்திட வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.               

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக உள்ளன. அண்மையில் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்ததின் காரணமாக அத்தொகுதியும் காலியாக உள்ளது. மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. ஒரு தொகுதியின் உறுப்பினர் இடம் காலியானால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்திட வேண்டும் என்கிற விதிக்கு தேர்தல் ஆணையம் மதிப்பளிக்க வேண்டும்.

காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தில், நியாயமான கால அவகாசத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நியாயமான கால அவகாசம் தற்போது உள்ளது. மக்களவைக்கான பொதுத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்குள்ளாக 4 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்களையும் நடத்துவதே சாலப் பொருத்தமானது. பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தாத இடைத்தேர்தல்களில் அதிக அளவில் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் நடைபெறும்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்கள் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை மறுக்க இயலாது. எனவே திறந்த, வெளிப்படையான, நேர்மையான, நியாயமான தேர்தலை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

இச்சூழ்நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையம் எவருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணியாது, தனது சுயேட்சை தன்மையைப் பாதுகாக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிடலாகாது. எஞ்சியுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக அறிவித்திட வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x