Last Updated : 12 Mar, 2019 11:21 AM

 

Published : 12 Mar 2019 11:21 AM
Last Updated : 12 Mar 2019 11:21 AM

காடுவெட்டி குரு இல்லாததால் சிதம்பரத்தில் போட்டியிட பாமக தயக்கம்?

காடுவெட்டி ஜெ.குரு இல்லாததால் சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாமக தயங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தொகுதியில் 5 முறை போட்டியிட்ட பாமக, 3 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய பாமக 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து, 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 2 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக, இம்முறை சிதம்பரம் தொகுதியை கேட்கவில்லை என இதுகுறித்து விவரமறிந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது, பாமக மற்றும் வன்னியர் சமூகத்தின் முக்கிய பிரமுகராக இருந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மறைவையே. குருவின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவியைத் தவிர குடும்பத்தினர் அனைவரும் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், சிதம்பரம் தொகுதியில் பாமக போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியாது என்பதால் சிதம்பரம் தொகுதியை பாமக கேட்கவில்லை எனக் கூறுகின்றனர்.

வட தமிழகத்தின் தொகுதிகளையே பாமக விரும்பிக் கேட்டுள்ளதாகவும். சிதம்பரம் தொகுதியைப் பெறுவது குறித்து பாமக சிறிதும் சிந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்பிருந்தே சிதம்பரம் தொகுதியைக் கேட்டு வந்த நிலையில், திமுக விட்டுக் கொடுத்து, திருமாவளவன் போட்டியிட்டால் இத் தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றிபெற்று விடுவார். இந்நிலையில், சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அவரை எதிர்கொள்ளும் வகையில் வலுவான வேட்பாளரை களமிறக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், 1952 முதல் 2014 வரை நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தல்களில் 2 முறை மட்டுமே(2014 உட்பட) சிதம்பரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் கூட்டணிக் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை விட்டுக்கொடுத்தால் மீண்டும் அதிமுகவுக்கு தொகுதி கிடைக்க எப்போது வாய்ப்பு கிட்டுமோ என்ற சந்தேகத்தில் சிதம்பரம் தொகுதியை இழக்க அதிமுகவும் விரும்பவில்லை என்பதும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x