Published : 11 Mar 2019 11:45 AM
Last Updated : 11 Mar 2019 11:45 AM

வாக்காளர்களை நோக்கிச் செல்லுங்கள்; அவர்கள் அதிமுக அரசை வலுப்படுத்துவார்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் அறிவுரை

வாக்காளர்களை நோக்கிச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றுவது அதிமுக அணியால் மட்டுமே சாத்தியம்  என்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினால் அவர்கள் அதிமுக அரசை வலுப்படுத்துவார்கள் என்று பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் 17-வது மக்களவையை அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி நிறைவடையவுள்ளது. இத்தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 21 இடங்களில் 18 தொகுதிகளுக்கும், 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கானத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நிறைவடைகிறது. 27-ம் தேதி பரிசீலிக்கப்படும் மனுக்களைத் திரும்பப்பெற மார்ச் 29-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுத் தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்த கட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதன் மூலம் தான் அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். கடந்த காலங்களில் அந்தப் பணிகளை பாமக சிறப்பாக செய்திருக்கிறது. இப்போதும் கூட தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக முதலில் குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்தி உரிமைகளை பெற்றுக் கொடுப்பதும் பாமக தான். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் கூட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் பாமக இணைந்துள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வது தான் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முதன்மைக் கடமையாக அமைய வேண்டும். அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதும் முக்கியமாகும்.

நாடாளுமன்றத்தில் பாமக வலிமையாக இருந்த காலம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் ஆகும். மக்களவைத் தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வெற்றிக்கு பாட்டாளி மக்கள் ஆற்றிய நன்றிக் கடன் பட்டியல் மிக நீண்டது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திய சுகாதாரத்துறை மற்றும் ரயில்வே துறை திட்டங்கள்  தான் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இவை தவிர மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மத்திய ஆட்சியாளர்களிடம் நான் போராடி பெற்றுத் தந்ததும், மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இந்தியா விடுதலை அடைந்த நாள் முதல் வழங்கப்படாமல் இருந்த பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வழங்கியதும் மக்களால் மறக்க முடியாத நன்மைகளாகும்.

அதேபோல், பாமக மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏராளமான உரிமைகளும், நன்மைகளும் கிடைக்கும்;  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை உறுதி செய்து கொள்ளப்போகும் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் தமிழகத்திற்கு ஏராளமானத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி கொண்டு வரும் என்பதை வாக்காளர்களிடம் நமது தொண்டர்கள் விளக்க வேண்டும். தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

அதேநேரத்தில் எதிரணியினர் வெற்றி பெற்றால் தமிழகம் எந்த அளவுக்கு வேட்டைக்காடாக மாற்றப் படும்; அப்பாவி மக்கள் அரும்பாடுபட்டு சேர்த்த நிலங்கள் எவ்வாறு பறிக்கப்படும்; மக்களின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படும்; பெட்டிக் கடைகளில் தொடங்கி, பியூட்டி பார்லர், பிரியாணிக் கடை வரை குண்டர்களால் எப்படியெல்லாம் சூறையாடப்படும்; உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை எப்படியெல்லாம் ஊக்குவிக்கப்படும்; பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் பெண் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்பன உள்ளிட்ட அனைத்து தீய விளைவுகளையும் தமிழக வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவை குறித்த திட்டங்களை வகுப்பதற்காக அனைத்துத் தொகுதிகளிலும் பாமக அளவிலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்தும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிட்டாலும் அதை சொந்தத் தொகுதியாக நினைத்து பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்ற வேண்டும். கிளை அளவில் தொடங்கி  தொகுதி அளவில் வரை பிரச்சாரக் குழுக்கள், ஒருங்கிணைப்புக் குழுக்கள், வாக்குச்சாவடி பொறுப்புக் குழுக்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த நிமிடத்தில் தொடங்கி வெற்றிக் கனியை பறிக்கும் வரையிலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களை சந்தித்து அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது அதிமுக தலைமையில்  பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் அணியால் மட்டுமே சாத்தியம் என்பதை கடந்த கால ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுங்கள். மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்டால் அவர்கள் நம்மை தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்து மக்களவைக்கு அனுப்பி வைப்பார்கள். தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றியை பரிசாகக் கொடுத்து அதிமுக அரசை வலுப்படுத்துவார்கள். இது உறுதி'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x