Last Updated : 23 Mar, 2019 02:43 PM

 

Published : 23 Mar 2019 02:43 PM
Last Updated : 23 Mar 2019 02:43 PM

ஓபிஎஸ்ஸுக்கு இந்த டிடிஎஸ்ஸால் பாடம் புகட்டப்படும்: தங்க தமிழ்ச்செல்வன்

ஓபிஎஸ்ஸுக்கு இந்த டிடிஎஸ்ஸால் தகுந்த பாடம் புகட்டப்படும் என தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக (அம்மா மக்கள் முன்னேற்றக் கழக) வேட்பாளராக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்படுவார் என பேசிக் கொண்டிருக்க அவரை தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்து ஆளும் அதிமுகவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன்.

ஏற்கெனவே அதிமுக சார்பில் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் களமிறக்கப்பட்டிருக்கிறார். இப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறாக தேனி தொகுதி விஐபி தொகுதியாக உருவாகி ஒட்டுமொத்த ஊடக கவனத்தையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தேனி வெற்றி வாய்ப்பு குறித்து தங்க தமிழ்ச் செல்வன் 'இந்து தமிழ் திசை'க்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

தேனி தொகுதி விஐபி தொகுதி ஆகிவிட்டதே?

யார் இங்கு விஐபி? நான் மக்கள் சேவகன். ஒருவேளை ஓபிஎஸ்ஸின் மகனைச் சொல்கிறீர்களோ? அப்படி என்றால் அதுவும் தவறு.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை. மக்களை இதற்கு முன் அவர் சந்தித்ததும் இல்லை. தேர்தல் வந்ததும் திடீரென்று வேட்பாளராகி பிரச்சாரத்துக்கு வருகிறார். அவரை தொகுதி மக்களுக்கு நேரடியாகத் தெரியவே தெரியாது. அப்பாவுடன் அவ்வப்போது அரசியல் மேடைகளில் அமர்ந்து கைகாட்டிச் செல்வார். அவர் எப்படி விஐபி ஆக முடியும்.

பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் ரவீந்திரநாத்தை அடையாளப்படுத்தினாலும்கூட தேனி மக்கள் அவரை நம்ப மாட்டார்கள்.

உங்கள் வாதப்படி ரவீந்திரநாத்தை மக்கள் அதிகம் அறியாமல் இருக்கலாம், ஆனால் ஈவிகேஸ் இளங்கோவன் நன்கு அறியப்பட்டவர்தானே?

ஆமாம் நன்கு அறியப்பட்டவர்தான். ஆனால், அவருக்கு தேனியா சொந்த ஊர்? சென்னையில் அமர்ந்துகொண்டு தொகுதியில் களப்பணி என்ன செய்ய முடியும்? இல்லை, எங்கள் தொகுதியைப் பற்றிதான் அவருக்கு என்ன தெரியும். அவர் மீது மக்களுக்கு எப்படி பற்று ஏற்படும்.

நான் அப்படி அல்ல. இந்த ஊர்க்காரன். இந்த ஊர் மக்களுக்கும் எனக்கும் அப்படி ஒரு நெருக்கம் இருக்கிறது. இங்கே நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் நானும் மக்களோடு மக்களாகப் பங்கேற்பேன். தொகுதி மக்களுக்காக சேவை செய்திருக்கிறேன்.

எங்கள் துணை பொதுச் செயலாளருக்கு இந்த ஊரில் செல்வாக்கு இருக்கிறது. அவரது அரசியல் பயணம் தொடங்கியதே இந்தத் தொகுதியில் இருந்துதான். அந்தச் செல்வாக்கு எங்களுக்கு வாக்குகளாக மாறும்.

இந்தத் தேர்தலில் அமமுகவின் ரோல் என்னவாக இருக்கும்? ஓட்டைப் பிரிக்குமா? அல்லது வெற்றியால் கை ஓங்கி நிற்குமா?

நாங்கள் ஓட்டைப் பிரிக்கும் சக்தி என்றுதான் எல்லோரும் எழுதுவார்கள், பேசுவார்கள். உண்மையில் நாங்கள் தேர்தல் அரசியலில் எப்படிப்பட்ட சக்தி என்பதை ஆர்.கே.நகரிலேயே நிரூபித்துவிட்டோம். அதனால், 18 சட்டப்பேரவை தொகுதியிலும் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் டிடிவி தினகரனுக்கே வெற்றி.

அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?

அதிமுகவில் துரோகிகள்தான் இருக்கிறார்கள். அது மக்களுக்குத் தெரியும். திமுகவில் கலைஞர் இடத்துக்கு ஸ்டாலினால் வர முடியுமா என்று தெரியவில்லை. ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்ததே. அதுவே நடந்திருக்கக்கூடாது. அப்படிப்பட்ட வலுவில்லாத தலைமையுடன் திமுக இருப்பதால் எங்களுக்கே வெற்றி கிட்டும்.

மக்கள் புதிய தலைமையை விரும்புகின்றனர். மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தான் எங்கள் தேர்தல் வாக்குறுதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவும் தேனியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.

நீங்கள் தேனியில் வலுவான வேட்பாளர்தான். ஆனால் அப்போதெல்லாம் அதிமுகவில், இரட்டை இலை சின்னத்தில் அறியப்பட்டீர்கள். இப்போதும் அதே பலம் இருக்குமா?

சின்னத்தால் வெற்றி என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. அதனை உடைத்தவரே டிடிவி தினகரன்தான். குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று ஆளும் அதிமுகவைத் தோற்கடித்து எதிர்க்கட்சியை டெபாசிட் இழக்கச் செய்தார். தேர்தல் ஆணையம் இதுதான் சின்னம் என்று சொல்லிவிட்டால் சமூக வலைதளங்கள் வாயிலாக டிடிவியின் சின்னம் அரை மணி நேரத்தில் மக்களை அடைந்துவிடும்.

சின்னம் முக்கியமில்லை என்றால் சின்னத்துக்கான உங்கள் போராட்டம் என்னவாகும்? டிடிவி புதிதாக தொடங்கிய இயக்கத்தை வளர்ப்பாரா இல்லை அதிமுகவைக் கைப்பற்ற மீண்டும் முயற்சிப்பாரா?

நான் இந்தத் தேர்தலில் சின்னத்தின் அவசியத்தைப் பற்றி சொன்னேன். இரட்டை இலை சின்னத்தை மீட்டு அதிமுகவை துரோகிகளிடமிருந்து மீட்க வேண்டும் என்ற எங்கள் நிலையில் ஒருபோதும் மாற்றமில்லை. இந்தத் தேர்தலில் நாங்கள் ஜெயிக்கிறோம். பின்னர் சின்னத்தை மீட்கிறோம்.

ஓபிஎஸ் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..

அவர் ஒரு சுயநலவாதி. தர்மயுத்தம் நடத்துகிறேன் என்றார். அவரை நம்பி 11 எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர். அவர்களுக்கு இவர் என்ன செய்தார். எல்லோரையும் புறக்கணித்துவிட்டு தனது மகனுக்கு சீட் வாங்கி பிரச்சாரத்துக்கு செல்கிறார். இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம், எவ்வளவு பெரிய சுயநலம் தெரியுமா? இந்தத் துரோகத்துக்கும் சுயநலத்துக்கும் மக்கள் தேர்தலின் வாயிலாக நல்ல பதிலடி கொடுப்பார்கள். டிடிவியால் உருவாக்கப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கு இந்த டிடிஎஸ் (தங்கத் தமிழ்ச்செல்வன்) தான் தகுந்த பாடம் புகட்டப்போகிறேன்.

அதிமுக - பாஜக கூட்டணியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது ஒரு பொருந்தாத கூட்டணி. மக்கள் ஏற்றுக்கொள்ளாத கூட்டணி.

ஜெ., இல்லாத அதிமுக, கருணாநிதி இல்லாத திமுக.. என்னவாகத் தெரிகிறது?

ஜெயலலிதா இல்லாத அதிமுக டிடிவி தினகரனை உருவாக்கியிருக்கிறது. அவரும் ஓர் இயக்கத்தை உருவாக்கி வெற்றிப் பாதையில் செல்கிறார். ஆனால், கருணாநிதி இல்லாத திமுகவில் ஸ்டாலின் ஒரு தலைவராக உருவாகவே இல்லை.

அப்படியென்றால் செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜன் எல்லோரும் ஏன் திமுகவுக்குச் சென்றனர்?

அது ஒரு பெரிய விஷயமே இல்லை. பேசுவதற்கு வாய்ப்பிருந்தும் ஏனோ சென்றுவிட்டார்கள். அப்படிச் சென்றதால் எங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. எங்கள் வெற்றி உறுதியானது.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x