Published : 08 Mar 2019 02:24 PM
Last Updated : 08 Mar 2019 02:24 PM
கோடைகாலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை ஆளும் கட்சிக்கு மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தலைவலியை உண்டாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வைத்த கோரிக்கை எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களைப் போல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்ற மிகப்பெரிய குடிநீர் திட்டங்கள் தென் தமிழகத்தில் இல்லை. அதனால், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை தென் மாவட்டங்களில் நிரந்தரமாகிவிட்டது. மக்கள் குடிநீரை மட்டுமின்றி அன்றாட வீட்டு உபயோகத்துக்குக்கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சி மதுரை. இங்குள்ள 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சியின் ஒட்டுமொத்த குடிநீர் ஆதாரமும் வைகை அணையைச் சார்ந்துள்ளது. வைகை நீர்மட்டம் தற்போது குறைந்துவிட்டது. கோடை மழை பெய்யாவிட்டால் மதுரையில் மே மாதம் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இந்தக் குடிநீர் பற்றாக்குறை கடந்த கால் நூற்றாண்டாக மதுரையில் நிலவுகிறது.
அதனால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கே.பழனிசாமி, ‘‘மதுரை மாநகராட்சிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டுவர ரூ.1,020 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்தார். தற் போது வரை இத் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதற்கான முயற்சிகளிலும் அரசு அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
அதுபோல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாகவே உள்ளது. அதனால், மக்களவைத்தேர்தல் நடக்கும் இந்தக் கோடைகாலத்தில் இந்த மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பூதாகரப் பிரச்சினையாக வெடிக்கும் அபாயம் உள்ளது.
மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக கூட்டணி வேட்பாளரும், அக்கட்சியினரும் செல்லும்போது மக்களைச் சந்திப்பதும், அவர்களிடம் ஆதரவு கேட்பதும் சவாலாக இருக்கும். தமிழக அரசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தட்டுப்பாடின்றி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான நிதியை தாமதிக்காமல் உடனுக்குடன் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.
குழாய்கள் மூலம் வழங்க முடியாத பகுதிகளில் லாரிகளை கொண்டு குடிநீரை விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், எந்தளவுக்கு மக்களுக்கு முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்பது தெரியவில்லை.
குடிநீர் பிரச்சினையைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு உளவுத்துறை மூலம் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப் படு கிறது. குடிநீர் பிரச்சினை தலைதூக்கினால் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் மக்களிடம் ஓட்டு கேட்டு செல்ல முடியாது என்பதாலே அதிமுகவினர் தேர்தலுக்காக அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு முன்னெற் பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் மே மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் தமிழகத்தில் தேர்தலை முதற்கட்டமாகவே நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளது. அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக மக்களவைத் தலைவர் வேணுகோபாலும் இந்த மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளனர். அதிமுகவின் இந்தக் கோரிக்கை ஏற்கப்படுமா? குடிநீர்ப் பிரச்சினையை அதிமுக அரசு சமாளிக்க முடியுமா? என்பது விரைவில் தெரிய வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT