Published : 24 Mar 2019 06:04 AM
Last Updated : 24 Mar 2019 06:04 AM

ராமநாதபுரத்தில் கமல், தென் சென்னையில் ஸ்ரீபிரியா?- மக்கள் நீதி மய்யம் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

மக்களவைத் தேர்தலில் மக்கள்நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதில்,கமல், ஸ்ரீபிரியா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்கள்நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதற்கிடையே மக்கள்நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களின் நேர்காணல் கடந்த வாரம்சென்னையில் நடைபெற்றது. கல்வித் தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய சேவைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்கட்டமாக 21 பேர்களின் பெயர்களை கமல்ஹாசன் சென்னையில் கடந்த 20-ம் தேதி வெளியிட்டார்.

இதில் கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை நடைபெறுகிறது.

எதிர்பார்ப்பு

இதில் மீதமுள்ள 19 தொகுதி களுக்கான வேட்பாளர்களை கமல் அறிவிப்பதுடன், தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை கமல் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்த தேர்தலில் கமல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று நடைபெறும் கோவை கூட்டத்தில் ஸ்ரீபிரியா, கவிஞர் சினேகன், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களும் தெரியவரும். ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்கின்றனர் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x