Last Updated : 09 Mar, 2019 03:05 PM

 

Published : 09 Mar 2019 03:05 PM
Last Updated : 09 Mar 2019 03:05 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 70 சதவீத இளம் வாக்காளர்கள்: தேர்தல், அரசியலில் ஆர்வம் குறைகிறதா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 70 சதவீத இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை. இது இளைஞர்களிடம் தேர்தல், அரசியல் குறித்த ஆர்வம் இல்லாத தையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி(தனி), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 31.1.2019 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 15,52,761 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 11,22,589 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் செய்தியாளர் சந்திப்பின்போது, தெரிவித் ததாவது: மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியான 9,226 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 மற்றும் 19 வயது இளம் வாக்காளர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 1.9.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4,933 வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ச் சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 31.1.2019 அன்று வாக்காளர் பட்டியலின்படி 15,769 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். விழிப்புணர்வு இல்லைமாவட்டத்தில் 18 மற்றும் 19 வயது இளைஞர்கள், பெண்கள் 53,251 பேர் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது. ஆனால், இதில் 50 சதவீதம் பேர் கூட வாக்காளர் பட்டியலில் சேரவில்லை. இதுவரை 30 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 15,769 பேர் மட்டுமே பெயர் சேர்த்துள்ளனர். தேர்தல் ஆணையம் 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர் பெயர்களை சேர்க்கும் வகையில் அவ்வப்போது கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தியது.

இருப்பினும் இன்னும் 100 சதவீத வாக்காளர்கள் பெயர்பட்டியலில் இடம் பெறவில்லை. வாக்களிப்பதன் மூலமே உண்மையான ஜனநாயகம் மலரும். தகுதியான தலைவர்களை தேர்வு செய்ய முடியும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலான இளைஞர்களிடம் இல்லாததையே இது காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x