Last Updated : 24 Mar, 2019 09:48 AM

 

Published : 24 Mar 2019 09:48 AM
Last Updated : 24 Mar 2019 09:48 AM

வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படுமா?

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கும் தபால் வாக்குகளை வழங்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வாக்குப்பதிவுக்குத் தேவை யான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் எடுத்துச் செல்ல தனியார் வாகனங்களான மினி லாரி, வேன்களை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பயன்படுத்தி வருகிறது.

இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு வாகனம் என்ற விகிதத்தில் வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த வாகனங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முதல்நாளே மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு வரவ ழைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதுடன், வாக்குப் பதிவு முடிந்ததும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற வுள்ள இடத்துக்கு கொண்டு வர வேண்டும்.

இப்பணியில் ஈடுபடும் தனியார் வாகனங்களின் ஓட்டுநர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, இந்த முறையாவது வாகன ஓட்டுநர்களும் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் என்பது ஒட்டுமொத்த ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் வாடகை வாகன ஓட்டுநர் உரிமையாளர் சங்க உறுப்பினர் ரவி கூறியதாவது:

வாக்குப்பதிவுக்கு முதல்நாளே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் எங்களுக்கு தகவல் தெரிவித்து அனைத்து வாகனங்களும் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்து விட வேண்டும் எனக் கூறுவார்கள். நாங்களும் அங்கு சென்றுவிடுவோம். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மையமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு வாகனமும் குறைந்தது 10 ஊர்களுக்காவது செல்ல வேண்டும்.

பின்னர் கடைசியாகச் செல்லும் ஊரில் நாங்கள் வாகனங்களை நிறுத்திவைத்திருந்து வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துக்கொண்டு அதே வழித்தடத்தில் வந்து வாக்குகள் எண்ணப்படும் இடத் தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்தில் ஏதோ ஒரு ஊரில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டுக் காத்திருக்கும் நாங்கள், சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் வாகனத்தை நிறுத்தி வைத்தி ருக்கும் இடத்துக்குச் செல்வது என்பது சாத்தியமில்லாதது.

எனவே, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கும் தபால் வாக்குகளை முன்கூட்டியே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வாயிலாக வழங்க வேண்டும். நாங்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் இதை வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையாவது நாங்களும் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் 195 மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ள தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு வாகனம் எனப் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 195 ஓட்டுநர்கள் வாக்களிக்க இயலாத நிலை ஏற்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x