Published : 19 Mar 2019 10:58 AM
Last Updated : 19 Mar 2019 10:58 AM
கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் செயல்பாடு என்ன என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் புதுச்சேரியில் பரவத் தொடங்கியுள்ளன. மக்களவையில் அவர் கேட்ட கேள்விகள் தொடங்கி வருகைப் பதிவேடு வரை தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியில் தோன்றிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, கடந்த 2014-ம் ஆண்டு முதன் முதலாக மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இக்கட்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமியை வென்று மக்களவைக்குச் சென்றார். கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி மக்களின் பிரதிநிதியாக அவர் நாடாளுமன்றத்தில் தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
இதற்கிடையே மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகளை தன்னார்வ அமைப்பு தொகுத்து தற்போது வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியிலிருந்து தேர்வான எம்.பி. ராதாகிருஷ்ணன் செயல்பாடு தொடர்பாக புள்ளி விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. தற்போது 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இவ்வமைப்பின் இணையத்தில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த இணையத்தில் புதுச்சேரி எம்.பி ராதாகிருஷ்ணனின் செயல்பாடு தொடர்பாக கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் விவரம்:மக்களவையில் கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி எம்.பி ராதாகிருஷ்ணன் மொத்தம் 11 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார். 2014 தேர்தலில் வென்று மக்களவையில் நுழைந்த ஆண்டில் மட்டும் 10 கேள்விகளை கேட்டுள்ளார். பிறகு 2016ல் ஒரே ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். 2016க்கு பின் எந்த ஒரு கேள்வியும் இவர் கேட்கவில்லை.
எம்.பிக்கள் எழுப்பும் கேள்விகளின் தேசிய சராசரி 293 (5 ஆண்டுகளுக்கு) என்பது குறிப்பிடத்தக்கது.
விவாதங்கள் எத்தனை கடந்த 5 ஆண்டுகளில் 9 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. அதே நேரத்தில் எம்.பிகளின் விவாத தேசிய சராசரி 67.1 ஆகும். மேலும் ராதாகிருஷ்ணனின் வருகை பதிவேடு 59 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் எம்.பிக்களின் தேசிய வருகை பதிவேடு சராசரி 80 சதவீதமாக உள்ளது.
அமைச்சராக இல்லாத மக்களவை உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் மசோதாக்கள் தனி நபர் மசோதாவாகும். புதுச்சேரி எம்.பி ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட தனி நபர் மசோதா தாக்கல் செய்யவில்லை. இந்த தனிநபர் மசோதாவின் தேசிய சராசரி 2.3 சதவீதம் ஆகும்.
தற்போது வெளியான புள்ளிவிவரங்களை அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி மக்களும் கூர்ந்து கவனித்து சமூக வலைத் தளங்கள் வழியாக பகிர தொடங்கியிருபபது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT