Published : 23 Mar 2019 10:15 AM
Last Updated : 23 Mar 2019 10:15 AM

வாக்கு விற்பனைக்கு அல்ல’: வாழ்த்து அட்டைகளில் பெற்றோருக்கு விழிப்புணர்வு - திருப்பூர் மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள் அசத்தல்

தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி, வாழ்த்து அட்டைகள் மூலமாக பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்துகின்றனர் திருப்பூர் மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள்.

திருப்பூர் மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள், ‘வாக்கு விற்பனைக்கு அல்ல’ எனும் வாழ்த்து அட்டைகளை பள்ளியில் தயாரித்து, பெற்றோருக்கு வழங்க உள்ளனர். இந்த முயற்சியில், முதல் கட்டமாக 5-ம் வகுப்பு குழந்தைகள் இறங்கி உள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக் குழந்தைகள் கூறியதாவது: ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கம் தேர்தல். அதன் ஒரு பகுதியாக, நல்லவர்களை அடையாள காட்ட வேண்டிய தேவையும், சமூகப் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு. நல்லவர்களை அடையாளம் காட்டினால்தான், எதிர்கால சமூகத்துக்கும் நல்லது. அதனை உணர்த்தும் வகையில், இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம்.

பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக்கூடாது. வாக்கை விற்பனை செய்யக்கூடாது என்பதை வெளிக்காட்டும் விதமாக, எங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்து அட்டைகள் தயாரித்தோம். அதில், எங்களின் பிரதானமான விஷயம், ‘வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதுதான். அடுத்த கட்டமாக ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளும் வாழ்த்து அட்டைகளை தயாரித்து, பெற்றோருக்கு ஆச்சர்ய பரிசாக வழங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

5-ம் வகுப்பு மாணவி தீப்தி கூறும்போது, ‘நல்ல திறமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது சமூகத்தில் பரவிவரும் மோசமான நோய். தனி மனிதர்கள் அதிக அளவில் தவறு செய்யும்போது, ஒட்டுமொத்த சமூகமும் பாழ்படும்' என்றார். பள்ளி ஆசிரியர் எம்.சரவணன் கூறும்போது, ‘முதல் கட்டமாக 40 குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை தயாரித்துள்ளனர். வரும் நாட்களில் பிற குழந்தைகளும் தயாரித்து, பெற்றோருக்கு வழங்க உள்ளனர். குழந்தைகளின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கண்டு வியப்பில் உள்ளோம்' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x