Published : 23 Mar 2019 12:54 PM
Last Updated : 23 Mar 2019 12:54 PM

ஜெயலலிதாவோட எல்லாமே போச்சு; இப்ப பணம்தான் எல்லாம்! - ஒரு ஸ்டிக்கர் வியாபாரியின் தேர்தல் கால அனுபவங்கள்!

தேர்தல் காலங்களில் கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என நிறைய கடந்து போகிறோம். பேருந்துகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என பெருக்கெடுக்கும் தொண்டர்கள், அணி அணியாய் திரண்டு செல்லும் காட்சி. மேடை முகப்பில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள். இதற்கிடையே பாப்கார்ன், பொரி கடலை, தம் டீ, கட்சி புத்தகங்கள் , கட்சி சின்னம் மற்றும் தலைவர் உருவம் பொறித்த கொடி தோரணங்கள், ஸ்டிக்கர் விற்பவர்கள் என பலரைக் கடந்து போகிறோம். அவர்களில் யாராவது ஒருவருடன் அரசியல் பேசினால் என்ன?

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கோவை மண்டல மாநாட்டுத் திடலுக்கு ஓரமாய் திமுக கூட்டணிக்கட்சி தலைவர்களின் பேட்ஜ், ஸ்டிக்கர் விற்றுக் கொண்டிருந்தார் தாணுமூர்த்தி. அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். மதுரையில் பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து  2002-ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்று வந்தவர் அப்போது முதலே இந்தத் தொழிலைத்தான் செய்கிறார். திருப்பூரில் வசிக்கும் இவர் தமிழகத்தில் போகாத இடமில்லை என்பதைச் சொன்னவர் இந்தத் தொழிலுக்குத் தான் வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘சின்ன வயசிலேயே சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதாதள்னு இருந்தவன் நான். கடைசியா ரஜினி ரசிகர் மன்றத்துல தீவிரமா இருந்தேன். மதுரையில் ரஜினி ஃபங்ஷன் ஒண்ணு நடந்தப்ப செம கூட்டம். அங்கே ரஜினி பேட்ஜுக்கு செம டிமாண்ட். சென்னையிலிருந்து அந்த ஸ்டிக்கர், படங்கள் எல்லாம் இருபத்தஞ்சு பேருக்கு மேல வித்தாங்க. அவங்க கூட நின்னு அதை வித்திருக்கேன். அரசு போக்குவரத்துக் கழகத்துல வேலைய விட்ட பிறகு, ரொம்ப சிரமப்பட்டேன். புள்ளைகளோட (2 மகன், 1 மகள்) திருப்பூர் வந்தேன். அங்கே ஆளுக்கொரு தொழில் செஞ்சு பொழச்சுக்கலாம்னு பார்த்தேன்.

புள்ளை பனியன் கம்பெனிகளுக்குப் போக, நான் வாட்ச்மேன் மாதிரி சின்ன சின்ன வேலைகளுக்கு போனேன்.  அவங்க டீ வாங்க, எடுபுடி வேலை செய்ய எல்லாம் பயன்படுத்தினாங்க. நம்ம அரசாங்க வேலையில ராஜா மாதிரி இருந்துட்டு இதையெல்லாம் செய்யணுமான்னு யோசிச்சேன். அப்பத்தான் மதுரையில ரஜினி கூட்டத்துல பேட்ஜ் வித்த நியாபகம் வந்துச்சு. 2003-ம் வருஷம் பசும்பொன்ல தேவர் ஜெயந்தி அமர்க்களப்பட்டுச்சு.  அதுல பேட்ஜ் வியாபாரிகள் மட்டும் 150, 200 பேர். நானும் தேவர் ஸ்டிக்கர் படங்களை மட்டும் மெட்ராஸ் போய் விலைக்கு வாங்கிட்டு வந்து கடை விரிச்சேன். ரெண்டு நாள்ல ரூ. 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல வியபாரம்.  அதுல எனக்கு 25 பர்சன்ட் கமிஷன் மட்டும் நின்னுச்சு.

அதுலயிருந்து இதையே புடிச்சுட்டேன். அதிமுக, திமுக, தேமுதிகன்னு எங்கே எந்தக் கூட்டம் நடந்தாலும் போயிடுவேன். அந்தந்த கட்சி, அதோட தலைவர்கள் பேசற கூட்டத்துல அவங்களோட கட்சி பேட்ஜ், தலைவர் பேட்ஜ் மட்டும் கடை விரிப்பேன்.  பேட்ஜ், பேனா, கீ செயின், டைரி, ஸ்டிக்கரு, பாக்கெட் கார்டு லேட்டஸ்ட், பிளாஸ்டிக் கார்டு, பிரின்ட் கர்ச்சீப்புன்னு மட்டுமல்ல மொய்கவர், லெட்டர் பேடு, கார் பிரேம் கண்ணாடி, கார்ல கட்டற கொடின்னு எங்கிட்ட இல்லாத அயிட்டம் இல்லை. ஒவ்வொரு கட்சிக்குமானதை தனித்தனியா மூட்டை கட்டி வீட்ல வச்சிருப்பேன். அந்தந்தக் கட்சிக் கூட்டத்துக்கு அந்தந்த மூட்டையில பையில தூக்கிப் போட்டுட்டு கிளம்பிடுவேன்.

தேர்தல் இல்லாத காலங்களில் மாசம் 10 - 15 கூட்டமாவது அட்டென்ட் பண்ணிருவேன். தேர்தல் காலம்னா குறைஞ்சது 20 கூட்டங்களுக்கு மேலதான். அப்ப எங்கே போறதுன்னே தெரியாது. அந்த அளவுக்கு திரும்பின பக்கமெல்லாம் பிரச்சாரப் பொதுக்கூட்டமா இருக்கும். பெரிய தலைவர்களின் கூட்டங்களைத்தான் தேர்ந்துதெடுத்துப் போவேன். சென்னையிலதான் அதிக கூட்டம் நடக்கும். அதனால அங்கே பாரீஸ்ல சரக்கு வாங்க போகும்போது அங்கேயும் ரெண்டு மூணு கூட்டம் வியாபாரம் பார்த்துட்டுத்தான் மத்த ஊர்களுக்கு கிளம்புவேன்!’’ என்றவரிடம், எந்த கட்சி பேட்ஜ், டைரி அதிகமாக விற்கும்? என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கும் நீட்டி முழக்கியே பதில் சொன்னார்.

''அதிமுக கூட்டம்தான் விற்பனையில நெம்பர் ஒன் சார். எப்படி பார்த்தாலும் பெரிய கூட்டம்னா ரூ.5000 வரைக்கும், சின்ன கூட்டம்னா ரூ.3000 வரைக்கும் வித்துடும் சார். அதெல்லாம் ஜெயலலிதா இருந்தப்பவோட போச்சு சார். இப்ப இந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் வந்த பிறகு விற்கறதேயில்லை. ஆர்வம் ரொம்பவே குறைஞ்சிருச்சு. அதுவும் காசு கொடுத்து ஆளுகளை கூட்டீட்டு வர்றாங்க. அவங்க பேட்ஜ், ஸ்டிக்கர் எல்லாம் வாங்கறதேயில்லை. அவங்களுக்கு எப்படி கட்சி உணர்வு வரும். திமுக பெரிய கூட்டத்துல கூட பெரிசா வியாபாரம் இல்லை. கருணாநிதி இருந்தப்ப கூட ஒண்ணு ரெண்டு வியாபாரம் ஆகும். இப்ப சுத்தமா இல்லை. அவங்க எல்லாம் பழைய ஸ்டிக்கரையே பாக்கெட்ல வச்சுக்கிறாங்க. சாமான்யத்துல காசை பாக்கெட்ல இருந்து எடுக்கறதுமில்லை.

விஜயகாந்த் ஸ்டிக்கர் ஒரு காலத்துல சூப்பரா போச்சு. அவர் கட்சி தொடங்கினப்ப மதுரை மாநாட்டுல மட்டும் நான் ரூ.10 ஆயிரத்துக்கு மேல ஸ்டிக்கர் வித்தேன். அது இப்ப சுத்தமா போச்சு. மத்த கட்சிகள்ல ஒண்ணும் சொல்ல வேண்டாம். ரூ. 200, ரூ. 300ன்னு வித்தாவே பெரிசு. ஆனா புதுசா வந்த கட்சியில டிடிவி தினகரன் கூட்டங்கள்ல நல்லா விற்குது. எப்படிப் பார்த்தாலும் மதுரை, தேனி, திண்டுக்கல்னு போனா ரூ. 3000க்கு குறையாம சேல்ஸ் ஆகுது. புது தலைவர் இல்லியா? அவர் பேட்ஜ் யாருகிட்டவும் இருக்காது. அதனால பாத்தவுடனே வாங்கிடறாங்க.

கட்சி தவிர்த்துப் பார்த்தால் சாதி அமைப்புக்கூட்டங்களில் சாதித் தலைவர்களுடைய படங்கள், ஸ்டிக்கர்கள் நல்லாப் போகுது. ஆனா என்ன ஆளாளுக்கு வந்து தண்ணிய போட்டுட்டு மிரட்டுவாங்க. லோலாய் பண்ணுவாங்க. காசு கொடுக்க மாட்டேம்பாங்க. எல்லாம் சமாளித்துத்தான் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கு!’’

‘‘எல்லாம் சரி பதினைஞ்சு பதினாறு வருஷமா இந்த வியாபாரம் செஞ்சுட்டே தேர்தல் அரசியலையும் கவனிச்சிருப்பீங்க. அதுல வர்ற கூட்டம், எழுச்சி எல்லாம் பார்த்து இந்த தேர்தல்ல எந்தக் கட்சி ஜெயிக்கும்னு உங்களால சொல்ல முடிஞ்சிருக்கா?’’

‘‘அது எப்படி சாமி முடியும். இப்ப எல்லாம் காசு கொடுத்துல்ல கூட்டத்தை கூட்டிட்டு வர்றாங்க. எல்லாம் பணம்தான். யாரு பணம் அதிகமா கொடுக்கிறாங்களோ, அவுங்க ஜெயிக்கிறாங்க. ரஜினி வருவேன்னு சொல்லியிருக்காரு. நிச்சயம் வர்றாரு. என் வூட்ல மட்டும் ஆறு ஓட்டு இருக்கு. அவர் வரும்போது அவருக்குத்தான் எங்க குடும்பத்து அத்தனை ஓட்டும் தெரியுமா?’’ என அடித்து விட்டார். ரஜினி ரசிகர் அல்லவா? நாமும் விட்டோம் ஜூட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x