Last Updated : 07 Mar, 2019 07:44 AM

 

Published : 07 Mar 2019 07:44 AM
Last Updated : 07 Mar 2019 07:44 AM

டெல்டா மக்களின் கோபத்தை ‘அறுவடை’ செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சி

காவிரி டெல்டாவில் அணையாத நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் நெடுவாசல் எண்ணெய்க் கிணறு, கதிராமங்கலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களின் வரிசையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே தினமும் போராட்டங்களாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்த பிரச்சினைகளின்போது மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாராமுகம், தமிழக அரசின் அணுகுமுறை ஆகியவை மீது மக்களுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. குறிப்பாக கதிராமங்கலம் பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்தபோது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறக்கூட தமிழக ஆளும் கட்சியினர் யாரும் அங்கு வரவில்லை.

இதேபோல, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் பிரச்சினை இதுவரை முடிவு தெரியாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியினர் இறுதியான பதிலைத் தரவில்லை என்ற ஆதங்கத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களைப் புரட்டி போட்ட கஜா புயலின்போது, நிவாரணப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என ஆளும் கட்சியினரைக் கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

புயல் நிவாரண நிதி 95 சதவீதம் கொடுக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு அதிகாரிகள் கூறினாலும், கிராமங்களில் பாதி பேருக்கு கிடைக்கவில்லை. ஆளும் கட்சியினருக்கு மட்டுமே புயல் நிவாரண பொருட்கள் அடங்கிய பெட்டகம் கொடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் கேட்டு டெல்டா மாவட்டங்களில் தினம் போராட்டங்கள்நடக்கின்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இத்தகைய பிரச்சினைகளை எதிர்க்கட்சியினர் பட்டியலிட்டு வைத்துள்ளனர். இப்பிரச்சினைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகள், ஆளும் கட்சியினர் மீதான மக்களின் கோபம் என்பதால், இதை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து மக்களின் கோபத்தை வாக்குகளாக அறுவடை செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x