Last Updated : 25 Mar, 2019 12:44 PM

 

Published : 25 Mar 2019 12:44 PM
Last Updated : 25 Mar 2019 12:44 PM

மீனவர்களுக்காக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும்: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

மீனவ சமூகத்துக்கும், மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் எதிராக கடந்த ஐந்து வருடங்களாக வலுவாகக் குரல் கொடுத்து வருகிறார் காளியம்மாள், பி.காம்.பட்டதாரி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மாநில மீனவப் பெண் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளரரகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடசென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காளியம்மாள்.

சாமானிய மக்களின் குரலை தனது பேச்சுகளில் வெளிப்படுத்தி தமிழகத்தின் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இடையே பலரின் கவனத்தை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் காளியம்மாளிடம் ’இந்து தமிழ் திசை’ சார்பாக  நடத்திய நேர்காணல்.

வடசென்னை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட இருக்கிறீர்கள். இங்கு கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற பிரதான கட்சிகள் மக்களுக்கு செய்யத் தவறியதாக நீங்கள் பார்ப்பது? நீங்கள் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

குற்றச்சாட்டுகள் என்று ஒன்றுமில்லை. ஆனால் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களுடன் ஆலோசித்து அதற்கான தீர்வை எப்படிக் காண்பது என்பதன் அடிப்படையில்தான் வெளியிட வேண்டும். ஆனால் பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மக்களுடைய பங்களிப்பு இல்லை. மக்கள் பங்கேற்புள்ள ஒரு திட்டத்தை அமல்படுத்தினால்தான் அது சரியாக இருக்கும்.

இதை தவிர்த்துவிட்டு தன்னிச்சையாக கட்சிகளே ஒரு திட்டத்தைத் தயாரித்து அதனை மக்களிடம் திணிப்பது சரியானது அல்ல.

இவர்கள் மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளும் (எடுத்துக்காட்டுக்கு ஆர்கே நகரில் குப்பையை அகற்றுதல்) நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. மக்களின் தேவையை உணர்ந்துதான் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலே வடசென்னை பின்தங்கி இருக்காது. இங்குள்ள தொழிற்சாலைகளை எல்லாம் பார்க்கும்போது இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருந்தாலே இங்குள்ள மக்கள் வறுமையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி வடசென்னையோடு தொடர்புபடுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? இதற்குமுன்னர் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிடமிருந்து  நீங்கள் எவ்வாறு வேறுபடுவீர்கள்?

நாங்கள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள். வடசென்னையில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு நாகப்பட்டினத்தில் இருப்பவர்கள் வரக்கூடாது என்ற பிரிவு இருக்கும்வரைதான் மக்களை ஏமாற்ற முடியும். வேறுபாடில்லாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுகிறார்களோ அப்போது மக்களால் அவர்களை ஏமாற்ற முடியாது. இங்கிருப்பவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன்.  அதுமட்டுமில்லாது நான் களத்திலிருந்து வந்திருக்கிறேன்.

எங்கு பிரச்சினை இருக்கிறதோ அங்கிருந்து வந்திருக்கிறேன். நான் மேலோட்டமாக யாரோ கொடுத்த தேர்தல் அறிக்கையைப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை. நான் மக்கள் முன் சென்று அவர்கள் பிரச்சனையைக் கேட்கிறேன். அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று அவர்களிடம் விவாதிப்பேன். அதன் அடிப்படையிலான திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகத்தான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். மக்களுக்கு எதிராக மசோதா நிறைவேறினால் அதற்கு எதிராக என் வாதத்தை வலுவான தகவலுடன் முன் வைப்பேன். நான் மக்களுக்குள் மக்களாக இருக்கிறேன். இதிலிருந்துதான்  நான் அவர்களிடமிருந்து வேறுபடுகிறேன். எங்கள் கட்சியின் திட்டங்களும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுதான் இருக்கும்.

நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே தேர்தலைத் தனித்து சந்திக்கிறீது. கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா? கடந்த தேர்தலில்  நீங்கள் அதிமுகவைத்தானே ஆதரித்தீர்கள்?

நான் முதலில்  ஒருகட்சியைப் பற்றி விமர்சிக்கிறேன்.. அதே நேரத்தில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதில் எனக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக  நான் வைத்த விமர்சனத்தை அந்தக் கட்சி மாற்றிக் கொள்வதற்கு முன்னதாகவே நான் அவர்களுடன் கூட்டணி வைப்பது முரணாகத்தானே இருக்கும். அதுமட்டுமில்லாது நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறோம். கருத்தியல் ரீதியான விமர்சனங்களை அவர்கள் மீது வைத்தோம். அதிமுகவும் பாஜகவை விமர்சித்திருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றால் இது சந்தர்ப்பவாத கூட்டணி. இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியானதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

சூழியலுக்கு கேடு விளைவிக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் பிரதானமாக வடசென்னையிலேயே ஒதுக்கப்படுவதால் இங்கு சூழல் மாசு அதிகம். இதற்கும் வடசென்னை மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர் பிரச்சினைக்கும் நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள்?

வடசென்னையில் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பல தொழிற்சாலைகள் உள்ளன. உதாரணத்துக்கு இரும்புத் தொழிற்சாலைக்குக் கூட தண்ணீர் தேவைப்படும். ஏன் அவை பெரும்பாலும் வடசென்னையின் கடலோரங்களில் அமைக்கப்படுகின்றது.இதனால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை எளிதாக கடல் தண்ணீரில் கொட்டிவிடலாம் என்ற நோக்கமும்,  தண்ணீர் தேவையும் அந்த தொழிற்சாலைகளுக்கு இருக்கிறது.

நம் நாட்டை எப்படி பிற நாடுகள் குப்பைத் தொட்டியாகப் பார்க்கிறதோ அதே மாதிரி நம் நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் கடலை குப்பைத் தொட்டியாகப் பார்க்கின்றன. இவ்வாறே மக்களுக்குத் தேவையான  நிலத்தடி நீரை உறிஞ்ச தொழிற்சாலைகள் இங்கு ஒதுக்கப்படுகின்றன. இங்கு தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. இத்தொழிற்சாலைகள் எவ்வளவு ஆழம் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துகிறார்கள்? ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இவர்கள் அளிக்கக் கூடிய ஆய்வறிக்கைகள்  எல்லாம் சரியாகச் சென்று சேர்கிறதா? அவர்களது தொழிற்சாலைகள் மாசு சார்ந்து சோதனை நடத்தி இருக்கிறார்களா?  இதன் முடிவுகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதா? இந்தத் தொழிற்சாலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அனுமதி இருக்கிறதா? என இம்மாதிரியான விஷயங்களை எல்லாம் யாரும் கவனிப்பது இல்லை. இதனுடைய விளைவுதான் நெருக்கடியான நிலையிலும் தொழிற்சாலைகள் அங்கு வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் குடிசை வாழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பெரிய முரண்பாடுதானே. இங்கு மக்களுக்கு பட்டா இல்லாததால் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்கிறார்கள். மக்கள் வாழ்வதற்கான சூழலைக் கெடுத்து தொழிற்சாலைகள் அமைக்க நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. சூழலைக் கெடுக்காத இடங்களிலேயே தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றினாலே தண்ணீர்  பிரச்சினை தீர்க்கப்படும். எங்கெங்கு குளங்கள், ஆறுகள் எல்லாம் அபகரிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும். இதைச் சொன்னால் இதுவெல்லாம் நடக்கற காரியமா என்று சிலர் சிரிப்பார்கள். ஆனால் கேரளாவில் இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.  இதனை நடைமுறைப்படுத்தும்போது நிலத்தடி நீர் நிச்சயம் பாதுகாக்கப்படும். 

வடசென்னையைப் பொறுத்தவரை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்கான தீர்வாக எதை முன்மொழிவீர்கள்?

இதுவரையில் இருந்த அரசியல் கட்சிகள் அந்தக் குப்பைக் கிடங்கை அகற்றுவதற்கான பணியைச் செய்வோம் என்றுதான் கூறியுள்ளன. ஆனால் அந்தக் குப்பைகளை மறு சுழற்சி செய்து எப்படிப் பயன்படுத்த முடியும், எதைப் பயன்படுத்த முடியாது என்று அறிவியல் தொழில்நுட்பமாகப் பார்க்கும் திட்டத்தை இதுவரை யாரும் சமர்ப்பித்ததாக நான் பார்க்கவில்லை.

நீங்கள் மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் குப்பைகளை மறுசுழற்சி செய்து அதனை உரமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால் குப்பைகளை அகற்றும் விவாதமே இங்கு வைக்கப்படுகிறது.

இங்கிருந்து குப்பைகளை அகற்றி இன்னொரு இடத்தில்தான் வைக்கப்போகிறார்கள். எனவே அந்தந்த பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய, மறுசுழற்சி மையம் அமைத்திருந்தார்கள் என்றால், இவ்வளவு குப்பை இங்கு சேர வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகாலத் திட்டத்தை வரையறை செய்வேன்.

வடசென்னையில் சிறு குறு தொழிலாளர்கள் அதிகம்.அவர்கள் பெரும்பாலும்  தனித்து இயங்குகின்றனர். அவர்கள் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன?

இன்றைக்கு தொழிலாளர் நலச் சட்டம் உள்ளது. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு உள்ளது. ஆனால் இவர்களது தரவு தமிழக அரசிடம் இருக்கிறதா? முதலில் அந்தத் தகவல் தேவை. வெறும் நல வாரியம் அமைப்பது மட்டுமே போதாது. வடசென்னையில் ஒருங்கிணைக்கப்பட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் பெரும்பாலும் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தரவுகள் இல்லாததால் உறுப்பினர்களைக் கண்டறிவது கடினமாகிறது. எனவே இவர்களைப் பற்றிய முறையான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்களது தேவையை நாம் நிறைவேற்ற முடியும்.

முதல்கட்டமாக இந்த தொழிலாளர்களை நான் ஒன்று சேர்க்க நினைக்கிறேன். அதன்பின்னர்தான் அவர்களுக்கான திட்டங்களை வரையறை செய்ய முடியும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் எண்ணிக்கை வடசென்னையில் அதிகம். இதன் காரணமாக இங்கு குற்றப் பின்னணி கொண்ட இளைய தலைமுறை காலம் காலமாக உருவாகிக் கொண்டுதான் வருகிறது? இவர்களை அரசியல் கட்சிகளும் காலம் காலமாகப் பயன்படுத்திதான் வந்திருக்கின்றன.  இப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் பார்வை என்ன?

நல்ல வீடு, பொருளாதாரச் சுமை இல்லாத வாழ்க்கை இருந்தால் யாரும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக நிச்சயம் உருவாக மாட்டார்கள். சிறையில் இருக்க வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா? இதற்கு அவர்களையே குற்றம் சொல்ல முடியாது. இந்த வாழ்க்கையைத் தராதது அரசின் குற்றம் தான். 

படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் திறன் சார்ந்த அரசு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொருவரின் தனித்திறமையைக் கண்டறிய வேண்டும். இதை நிறைவேற்றினால் அந்த இளைஞர்கள் குற்றப் பின்னணியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மீனவப் பின்னணியைச் சேர்ந்த நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் மீனவர்களுக்காக உங்கள் குரல் எவ்வாறு ஒலிக்கும்?

நிச்சயம் மீனவர்களுக்குகாக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும். 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது எனது முதல் கோரிக்கையாக இருக்கும். இரண்டாவது சாகர் மாலா திட்டம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நீக்கப்பட வேண்டும். மூன்றாவது பழங்குடி மக்கள் பட்டியலில் எங்களையும் சேர்த்து எங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

கடலோரங்களில் வாழும் பூர்வீக மக்களுக்கு அவர்கள் வாழும் இடத்துக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் மீன் பிடிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும்.

கடலோரக் காவல்படையில் 70% பேர் மீனவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். மீனவப் பெண் தொழிலாளர்களை அங்கீரித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை ஒதுக்க வலியுறுத்தப்படும் என்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன் வைப்பேன்.

நாம் தமிழர் கட்சி பொதுவாக தமிழர்களையே முன்னிறுத்துகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில்?

மொழி சாகும்போது அந்த இனமும் செத்துவிடும். தமிழ் மொழியை யார் நேசிக்கிறார்களோ அவர்களை முன் நிறுத்துவதுதான் நாம் தமிழரின் முக்கியக் கொள்கை. தமிழர் இனத்தை தமிழரே ஆள வேண்டும் என்பது நியாயம்தானே.இப்பவும் நாங்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என்றுதான் கூறுகிறோம். இங்குள்ள பிற மொழிகளுக்கான நலத்திட்டங்களையும் சேர்த்து தானே நாங்கள் குரல் கொடுக்கிறோம். இதில் சாதி, மதம், இனம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை.

இறுதியாக வடசென்னை மக்களுக்கு நீங்கள் கூறுவது?

நாம் மாற்றங்களைத் தேடுகிறோம். ஆனால் அதற்கான அடியை எடுத்து வைப்பதில்லை. நம்மிலிருந்து வரும் வேட்பாளர்களை இனம் கண்டு நமது பிரதிபலிப்பாக அவர்கள்  நாடாளுமன்றத்தில் பேசுவார்கள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வாக்களித்துது தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கான காலம் பிறக்கும். 

எனவே நிச்சயமாக வடசென்னை மக்கள் அடித்தட்டு சமூகத்திலிருந்து வந்த எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x