Published : 28 Mar 2019 08:44 AM
Last Updated : 28 Mar 2019 08:44 AM
பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என்று எது வந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பணிகளில் வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதும் ஒன்றாக இருக்கிறது. ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்று தீவிரமாகப் பிரச்சாரம் ஒருபுறம் நடந்தாலும், அரசியல் கட்சிகளின் திரைமறைவு வேலைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டியிருக்கிறது.
போட்டியிடத் தரப்படும் சின்னங்களையே பரிசாக வழங்கியது, தேர்தல் முடிந்த பிறகு பணத்தைப் பெறுவதற்காக ரூ.20 நோட்டில் அடையாளம் வைத்து அதையே டோக்கனாக வழங்கியது, லட்டில் மூக்குத்தி அல்லது கம்மல் வைத்துக் கொடுத்தது, வாக்குக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்துக் கடவுளர் படங்கள் மீது சத்தியம் வாங்கியது என சம்பவங்கள் தொடர்கின்றன. பணம் வாங்கக் கூடாது என்ற எண்ணம் வாக்காளர்களிடமும், தரக் கூடாது என்ற பொறுப்பு அரசியல் கட்சிகளிடமும் வராத வரை, இவற்றைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்த வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்கிறது.
தொடரும் தலைகுனிவு
தேர்தலில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகளே, அதைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் பணிகள் என்பது வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு, வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்குப் பதிவு, வாக்குகளைப் பத்திரமாகப் பாதுகாப்பது, பிறகு வாக்கு எண்ணிக்கை என்பதாகத்தான் இருந்துவந்தது. தேர்தல் பார்வையாளர்கள், செலவு கண்காணிப்பாளர்கள் என்றெல்லாம் ஆணையத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதற்குக் காரணம், அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றன என்பதால்தான்.
நாடு முழுவதும் 543 தொகுதிகளிலும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், வேட்பாளர்களிடம் பணம், பரிசுகளை எதிர்பார்க்கும் வாக்காளர்களும் இருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. பெரும்பான்மையான வாக்காளர்கள் அப்படியில்லை என்பது ஆறுதல் என்றாலும், எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. அதனால்தான், கோடீஸ்வரர்களும் ஆள் பலம் உள்ளவர்களும் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்காக அவர்கள் எவ்வளவு செலவழித்தாலும், தேர்தல் செலவை வெவ்வேறு வகைகளில் பிரித்துக் காட்டி, செலவு வரம்பை மீறவில்லை என்று தப்பித்துக்கொள்கிறார்கள்.
கோடீஸ்வரர்கள்... குற்றவாளிகள்...
கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல; குற்றப் பின்னணி உள்ளவர்களும் வேட்பாளர்களாகக் களமிறங்குவது அதிகரித்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் வழக்குகளும் ஒரு பகுதிதான். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டபோது, பெரும்பாலானவர்கள் மீது சட்டத்தை மீறியதாக பிரிட்டிஷார் தொடுத்த வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆனால், இப்போதோ முறைகேடான சொத்துச் சேகரிப்பு, ஊழல், வரி ஏய்ப்பு, மோசடி, நம்பிக்கைத்துரோகம் என்று பல்வேறு விதமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தீர்ப்பு வரும் வரை அவர்கள் யாரையும் சட்டப்படி குற்றவாளிகளாகவும் கணக்கில்கொள்ள முடியாது. எனவே, கடுமையான நடத்தை நெறிமுறைகளும்கூட விரும்பிய பலனைத் தருமா என்ற கேள்வியே மிஞ்சுகிறது.
நாடு முழுவதும் இதுவரை ரூ.540 கோடிக்குப் பணம், மது, இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ரூ.143.37 கோடிக்கு ரொக்கம், ரூ.89.64 கோடி மதிப்பிலான மதுவகைகள், ரூ.131.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.162.94 கோடி மதிப்புக்குத் தங்கம் உள்ளிட்ட பொருள்களும், பரிசாக தருவதற்குரிய பொருள்கள் ரூ.12.20 கோடிக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.107.24 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாம் இதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். இவை அனைத்துமே வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுசெல்லப்பட்டவையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல வாக்காளர்களுக்காகக் கொண்டுசெல்லப்பட்ட அனைத்துமே பறக்கும் படைகளால் தடுக்கப்பட்டுக் கைப்பற்றப்படவும் வாய்ப்பில்லை.
தோல்வியடையும் சீர்திருத்த நடவடிக்கைகள்
தேர்தல் சமயங்களில் சோதனைகளில் பிடிபடுபவை அனைத்துமே அரசியல் கட்சிகளால் கடத்தப்படுபவை அல்ல. வியாபாரிகள் இன்னமும்கூடத் தங்க நகைகளையும் ரொக்கங்களையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எந்தவித ஆவணங்களும் இன்றி அனுப்பிவைக்கும் வழக்கத்தைத் தொடர்கின்றனர். பொதுச் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்தாலும், வரி விகிதங்கள் குறைந்தாலும், வரி செலுத்துவது எளிதானாலும் வரி ஏய்ப்பு என்பது தொடரவே செய்கிறது என்பதையும் இந்தச் சோதனைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அப்படியென்றால், நாம் இதுநாள் வரை சீர்திருத்தங்கள் என்று பேசிவரும், முயன்றுவரும் நடவடிக்கைகள் என்ன ஆகின்றன? அவை மீண்டும் மீண்டும் ஏன் தோல்வி அடைகின்றன? இது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கேள்வி மட்டும் அல்ல. நம்முடைய பரிமாற்றங்களில் பணத்தின் ஆதிக்கம் தொடர்ந்து முன்னிலை வகிப்பது தொடர்பான கேள்வியும்கூட. நம்முடைய வரிவிதிப்பு முறை உண்மையாகவே நியாயமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறதா என்பதோடு தொடர்புடைய கேள்வியும்கூட.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT