Published : 03 Mar 2019 09:03 AM
Last Updated : 03 Mar 2019 09:03 AM

தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை- தலைமை மீது ஆதங்கம்

திமுகவில் தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கான செலவுக்குகூட பணம் தரப்படுவது இல்லை என்று நிர்வாகிகள் மத்தியில் ஆதங்கம் எழுந்துள்ளது.

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது தேர்தல் கூட்டணி தொடர்பாக தென் மாவட்ட முக்கியநிர்வாகிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டுவிட்டுதான் முடிவு எடுப்பார். ஆனால், மு.க.ஸ்டாலின் திமுகவில் தலையெடுக்க ஆரம்பித்தது முதல் இந்த நிலை மாறத் தொடங்கியது. கூட்டணியாக இருந்தாலும், கட்சியின் மற்ற முக்கிய நிலைப்பாடுகளிலும் தென் மாவட்ட நிர்வாகிகளை கலந்து பேசாமல், ஸ்டாலினும், அவரை சார்ந்த ஒரு சிலரும் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர் என்று ஆதங்கப்படுகின்றனர் தென் மாவட்ட நிர்வாகிகள்.

செலவுக்கு பணம் தருவதில்லை‘கட்சி செலவுக்குக்கூட மேலிடம் பணம் கொடுப்பதில்லை. வட மாவட்டங்களின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே கட்சியில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஸ்டாலினின் நடவடிக்கைகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இல்லை’ என்றும் தென் மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுகுறித்து திமுகவினர் மேலும் கூறியதாவது:ஸ்டாலின் கட்சித் தலைவரான பிறகு மாநாடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இந்த செலவுகளுக்கு கட்சியில் இருந்து சிறிதுகூட பணம் தரவில்லை. அந்தந்த ஒன்றியச் செயலாளர்களே சொந்த பணத்தை செலவிட்டு கட்சித் தொண்டர்களை திரட்டினர். தேர்தலுக்காக ‘பூத்’ கமிட்டி ஆரம்பிக்குமாறு தலைமை சொன்னது. ஒவ்வொரு பூத்துக்கும் 21 நிர்வாகிகளை நியமித்து அதற்கான ஆலோசனைக் கூட்டம், ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் டீ செலவுக்குக்கூட தலைமை பணம் தரவில்லை.

முன்பெல்லாம், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர், பேரூர் செயலாளர்கள் வரை மட்டுமே செலவு செய்யச் சொல்வார்கள். தற்போது ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்களுக்கும் நிறைய வேலை சொல்கின்றனர். கூட்டம் நடத்தச் சொல்கின்றனர்.

வருவாய் இல்லை

கடந்த 8 ஆண்டுகளாக திமுகஆட்சியில் இல்லை. எம்எல்ஏவாக இருப்பவர்களுக்குக்கூட வருவாய் இல்லை. இந்த நிலையில் கீழ்நிலை நிர்வாகிகளின் தலையிலேயே எல்லாசெலவுகளையும் சுமத்தினால் என்ன செய்வது?தற்போது மக்களவைத் தேர்தலும் நெருங்கிவிட்டது. பொதுவாகவே, திமுகவில் ‘சீட்’ மட்டுமே தருவார்கள். தேர்தல் செலவை அந்தந்த வேட்பாளரும், மாவட்டச் செயலாளரும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். காலம் எவ்வளவோ மாறியும், தலைமை இன்னும் மாறவே இல்லை.

தொண்டர்களின் ஆதங்கம், விரக்தி குறித்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் ஸ்டாலினை நெருங்கி கருத்து கூறும் நிலையும் இல்லை.

மு.க.அழகிரி இல்லாத தென் மாவட்ட திமுகவில் அவருக்கு நிகராக மற்றவர்களை வளர்த்துவிடவும் ஸ்டாலின் தயாராக இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x