Published : 19 Mar 2019 10:00 AM
Last Updated : 19 Mar 2019 10:00 AM

இலவசமாக குடிநீர் விநியோகிக்கும் மக்கள் நீதி மய்யம்: ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியா?

நடிகர் கமலின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 6 மாதமாக இலவசக் குடிநீர் வழங்கும் பணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஈடுட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்ட மண்ணில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து 21.02.2018-ல் தனது முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், தற்போது வேட்பாளர் தேர்வில் கமல் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் களம் இறங்கலாம் என்றும், கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த மக்களவைத் தேர்தலில் சொந்த மண்ணான ராமநாதபுரம் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட கட்சியினர் விரும்புவதால், அதற்கு ஏற்றார் போல் கமல்ஹாசன் வியூகங்கள் வகுத்தும் வருகிறார்.

இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் குடிநீர் பிரச்சினையை மையப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பரமக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவசமாக குடிநீரை விநியோகித்து வருகின்றனர்.

இது குறித்து பரமக்குடியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது: கட்சி ஆரம்பித்தவுடனே பரமக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கமல் அறிவுறுத்தினார்.

இதனால் கடந்த ஆறு மாதங்களாக பரமக்குடி, அதன் சுற்றுவட்டார கிராமங்களான சோமநாதபுரம், குலவிப்பட்டி, அண்டிக்குடி, வெங்கடேஷ்வரா காலனி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லாரிகளில் இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறோம். தற்போது கோடை தொடங்கி உள்ளதால் இப்பணியை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

இலவச குடிநீர் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவான வாக்குகளாக மாறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x