Last Updated : 15 Mar, 2019 08:31 AM

 

Published : 15 Mar 2019 08:31 AM
Last Updated : 15 Mar 2019 08:31 AM

முஸ்லிம்கள் அவரவர் விரும்பும் கட்சிக்கே வாக்களிப்பர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கருத்து

முஸ்லிம்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். வழக்கம்போல, அவர்கள் அந்தந்த கட்சிகளுக்கே வாக்களிப்பாளர்கள். முத்தலாக் தடை அவசரச் சட்டம் காரணமாக பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பார்கள் என்று கூறமுடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு கே.எம்.காதர் மொய்தீன் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:

பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மதக்கலவரம் நடைபெறவில்லை என்று பாஜக பிரச்சாரம் செய்கிறதே?

வகுப்புக் கலவரம் பெரிய அளவில் நடக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், மாட்டு இறைச்சிவிவகாரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இது மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியம் மிக்க இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக தலைமையிலான கூட்டணியில் ஒருதொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதே. இதுபற்றி..

முதலாவது நாடாளுமன்றத்தில் இருந்து இதுவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. எண்ணிக்கை பெரிது அல்ல. சிறுபான்மையினரின் உணர்வுகள், உரிமைக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து குரல் கொடுப்பதே முக்கியம்.

கட்சிப் பெயரிலேயே மதம் இருக்க, நீங்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுகிறீர்களே?

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்போல இந்திய அரசியல் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திகழ்கிறது. கட்சியின் பெயரில் மதம் இருந்தாலும்கூட, இது வகுப்புவாதக் கட்சி அல்ல.

சுதந்திரப் போராட்டம் முதல் இதுவரை அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டு வருகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் கலாச்சார தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேச ஒற்றுமை,சமூக நல்லிணக்கம், பன்முகத்தன்மை பாதுகாப்பு ஆகியவையே எங்கள் கட்சியின் பிரதான நோக்கங்கள் ஆகும்.

முத்தலாக் முறை தடைக்கு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்ததால், முஸ்லிம் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு போகும் என்று கூறப்படுகிறதே?

முத்தலாக் முறையை எதிர்த்து 4 பெண்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களும் பாஜக தூண்டுதலாலேயே வழக்குதொடர்ந்துள்ளனர். முத்தலாக் முறைக்கு தடை கூடாது என்று வலியுறுத்தி நாடு முழுவதும் 4 கோடி முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தினர். முத்தலாக் என்ற முஸ்லிம்களின் விவாகரத்து முறையை பள்ளிவாசல், ஜமாத் போன்றவை அவ்வளவு சீக்கிரம் ஏற்பதில்லை. சமரசம் செய்துவைப்பதோடு, அதுசம்பந்தமாக முழுமையாக விசாரணையும் நடத்தப்படும். சிலரதுதவறுகளால் அனைத்து முஸ்லிம்களையும் தவறாகப் பார்க்கக் கூடாது.

பல்வேறு கட்சிகளில் உள்ளனர்முத்தலாக் முறையை தடை செய்யும் அவசரச் சட்டத்தால், இத்தேர்தலில் முஸ்லிம் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை. முஸ்லிம்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனர். அந்தந்த கட்சிக்கு வாக்களிப்பதில் அவர்கள் எப்போதும்போல உறுதியாக உள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காணக் கூடாது. ‘இந்து’ ராம் உள்ளிட்ட 600 அறிஞர்கள் அளித்தஅறிக்கை அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்.

‘ஈராண்டு சாதனைகளை நூறாண்டு பேசும்’ என்ற தமிழக அரசின் முழக்கம் பற்றி..

மக்கள் நலன், மாநில உரிமைகள் உட்பட எதுபற்றியும் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை.

மத்திய அரசு, இந்திய பாரம்பரியம், பண்பாடு மற்றும் பெருமைகளைக் காப்பாற்றத் தவறியதுடன், காந்திஜி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகள், கொள்கைகளையும் பின்பற்றவில்லை. அதனால், மத்திய, மாநில அரசுகள் மீது தமிழக மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x