Published : 25 Mar 2019 06:22 AM
Last Updated : 25 Mar 2019 06:22 AM

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வாக்குகளை பெற அமமுக திட்டம்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவதால் அதிமுக அதிருப்தி வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக இருந்தும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாமகவுக்கு ஒதுக்கீடு

இதனால், மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக, நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால்தான் சரியாக இருந்திருக்கும். ஆனால்பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால், திமுக வேட்பாளருக்கு ஈடு கொடுப்பதற்கு ஆளுங்கட்சி கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் இருந்தாலும், அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் தொகுதி தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும், சோர்வும், ஏக்கமும் உள்ளன.

அதிருப்தியில் அதிமுகவினர்

இதனிடையே அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக இந்த மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றனர். தேர்தல் பணியில் தீவிரம்தொகுதியைக் கூட்டணிக்கு விட்டுக்கொடுத்ததால் அதிருப்தியில் உள்ள உள்ளூர் அதிமுக வினர், எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என அமமுக நிர்வாகிகள் நம்பிக்கையில் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை குறிவைத்து அமமுகவினர் அதிகாலையில் விளையாட்டு மைதானங்களுக்கு சென்று ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுக போட்டியிட்டிருந்தால் இரட்டை இலைக்காக சிலர் வாக்களிக்க வாய்ப்பு இருந்தது. தற்போது அதிமுக போட்டியிடாததால், அந்த வாக்குகள் அனைத்தும் எங்களுக்குதான் கிடைக்கும்.அதனால், எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. அப்படியே வெற்றிவாய்ப்பு இல்லையென்றாலும் கணிசமான ஓட்டுகளைப் பெறுவதன் மூலம், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிவாய்ப்பை தடுக்க முடியும் என்றனர்.

ஸ்லீப்பர் செல்கள்

அதிமுகவின் தற்போதைய தலைமை மீது தொகுதி ஒதுக்காதது, கடினமாக உழைத்தும் கட்சியில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் தலைமை வகிக்கும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் குறித்து இரண்டாம் மட்டத் தலைவர்களிடம் இந்த அதிருப்தியாளர்கள் அவ்வப்போது புகார் தெரிவிக்கின்றனர். இந்த அதிருப்தியாளர்களை ஒருங் கிணைத்து அவர்களை ஸ்லீப்பர் செல்களாக மாற்றும் பணியை தாம்பரம் அமமுகவினர் தொடங்கி உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி விவரம்

கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கே.என்.ராமசந்திரன், 5,45,820 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் ஜெகத்ரட்சகன் 4,43,174 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மதிமுகவின் மாசிலாமணி, 1,87, 094 வாக்குகளையும், காங்கிரஸின் அருள் அன்பரசு 39,015 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x