Published : 28 Mar 2019 06:13 PM
Last Updated : 28 Mar 2019 06:13 PM
திமுக, காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரத்தில் ராமதாஸ் மாற்றிப் பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக பாஜகவுடனும் திமுக காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கட்சித் தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வட மாவட்டங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். இதன் ஒருபகுதியாக ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக, காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்பதற்குப் பதிலாக திமுக, அண்ணா திமுகவுக்கு...என்று மாற்றிப் பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தனது தவறைத் திருத்திக்கொண்ட ராமதாஸ், ''திமுக, காங்கிரஸுக்கு மறந்தும் வாக்களிக்காதீர்கள்'' என்றார்.
முன்னதாக ராமதாஸ் 2011-ல் ''கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை'' என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT