Published : 29 Mar 2019 06:21 AM
Last Updated : 29 Mar 2019 06:21 AM
மதுரை அதிமுக வேட்பாளரை முடிவு செய்வதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு இடையே நிலவிய கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.
இதில், ராஜன் செல்லப்பா மகனுக்கு ‘சீட்’ பெற்று சாதித்துக் கொண்டாலும், இவரது புறநகர் மாவட்டத்தில் இருந்த உசிலம்பட்டி, சோழவ ந்தான், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை ஆர்.பி.உதயகுமாரிடம் இழந்துவிட்டார். அதிமுக தலைமை, ஆர்.பி.உதயகு மாரை சமாதானப்படுத்த ராஜன் செல்லப்பா விட்டுக் கொடுத்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக அறிவித்தது.
மகனை மத்திய அமைச்சராக்கும் திட்டம்
அதனால், ராஜன் செல்லப்பா மகனுக்காக தனது கட்டுப்பாட்டில் இருந்த புறநகர் மாவட்டத்தில் சரிபாதியை இழந்ததுதான் மிச்சம். ஏற்கெனவே, மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ராஜன்செல்லப்பா, அமைச்சராக பகீரத முயற்சி மேற்கொண்டார்.
ஆனால், அது கடைசி வரை கைகூடாமல்போனது. அதனால், மகனுக்கு எம்பி ‘சீட்’ பெற்றுக் கொடுத்து வெற்றிபெற வைத்தால் கட்சி தலைமைக்கு தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கலாம்.
மேலும், தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக மகனை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து, மகனையும் வெற்றிபெற வைத்தால் மத்திய அமைச்சராக்கும் திட் டத்தையும் ராஜன் செல்லப்பா கைவசம் வைத்துள்ளார். இதனால், அவரது இந்தக் கனவு நிறைவேறுவது மகனின் வெற்றிவாய்ப்பில்தான் உள்ளது.
அதற்காக ராஜன் செல்லப்பாவும் மதுரை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மற்ற எம்எல்ஏ-க்கள், ‘சிட்டிங்’ எம்பி மற்றும் மாநகர நிர்வாகிகளைச் சரிக்கட்டி மகனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வைத்து வருகிறார்.
சிட்டிங் எம்.பி.யிடம் சமரசம்
‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் இருந்த கோபால கிருஷ்ணனை சமாதானம் செய்து, ஒத்தக்கடை பகுதியில் பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்றார். அவரும், மதுரை மேயராக ராஜன் செல்லப்பா இருந்தபோது செய்த சில விஷயங்கள் பற்றி குறிப்பிட்டார். அவரது மகனை எம்பியாக்கினால் அவரும் இரு மடங்கு செய்வார், என்று பொடி வைத்துப் பேசினார். அவரது இந்தப் பேச்சை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று கட்சியினரே கமெண்ட் அடித்தனர்.
ராஜன் செல்லப்பா தனது அரசியல் அனுபவத்தால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ-க்கள் சரவணன், பெரிய புள்ளான், மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மற்றும் மாநகர நிர்வாகிகள் அனைவரையும் சரிக்கட்டி மகன் ராஜ்சத்யனை ஆதரித்து நடக்கும் பிரச்சாரத்துக்கும், தேர்தல் பணிகளுக்கும் வரவழைத்துவிட்டார். ஆனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும் இதுவரை ராஜ்சத்யன் பிரச்சாரத்தில் தலை காட்டவில்லை.
மதுரை தொகுதி மக்கள் எல்லோருக்கும் அறிந்த முகம் ஆர்.பி.உதயகுமார். அவருக்கென்று ஒரு செல்வாக்கு மாநகர் பகுதியில் உள்ளது. அவரின் வீடும், கே.கே.நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளது.
ராஜ்சத்யனின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கும், வேட்பு மனுதாக்கலுக்கும் ஆர்.பி.உதயகுமாரை ராஜன் செல்லப்பா தரப்பில் அழைத்துள்ளனர். அவர் வர விரும்பவில்லையா? அல்லது இயல்பாகவே அவர் வர முடியாத காரணங்கள் இருந்ததா? என்று கட்சியினர் குழம்பிப்போய் உள்ளனர்.
ஆனால், வேட்பாளர் ராஜ்சத்யன், அவரது தந்தை அறிவுரையின்பேரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். மதுரை, விருதுநகர் தொகுதி யிலும் அமைச்சர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர் களிடம் கேட்டபோது, கோஷ்டிகளைச் சரிக்கட்ட புறநகர் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படவில்லை. கட்சிப் பணிகளை இன்னும் எளிமையாக்கவும், துரிதப்படுத்தவுமே புறநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி தொகுதியை ஆர்.பி.உதயகுமார்தான் கவனிக்கிறார் என்றனர்.
கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பு
ராஜ்சத்யன் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ-க்கள் சரவணன், பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் உடன் சென்றனர். கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருவர்கூட அவருடன் அனுமதிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க அதிமுகவினரே உடன் இருந்ததால் கூட்டணி கட்சி நிர்வாகிகளைப் புறக்கணித்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. இந்தச் செயல் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT