Published : 21 Mar 2019 04:09 PM
Last Updated : 21 Mar 2019 04:09 PM
சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கத் திட்டமிட்டு அமமுக களத்தில் இறங்கியுள்ளதால் திமுக கூட்டணிக் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினர் ஆத ரவு தங்களுக்குக் கிடைக்கும் என திமுக கூட்டணி கணக்குப் போட்டுள்ளது. ஆனால், அந்த எண்ணத்தைத் தகர்க்கும் வித மாக அமமுகவினர் செயல் பட்டு வருகின்றனர்.
அமமுக, எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் அக் கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. இதனால் எஸ்டிபிஐ கட்சியினர் முஸ்லிம் வாக்குகளை அமமுக வேட்பாளர்களுக்குப் பெற்று தர தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே கிறிஸ்தவ அமைப் புகளைச் சந்தித்து டிடிவி. தினகரன் ஆதரவு திரட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையேயும் தொடர்ந்து சிறுபான்மையின அமைப்புகளைச் சேர்ந்த தலை வர்கள், பேராயர்களைச் சந்தித்து வாக்குகளைத் தங்கள் வசமாக்கத் திட்டமிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் வாக்குகள் சிதறுவதால் தங்களுக்குப் பாதகம் ஏற்படும் என திமுக கூட்டணியினர் கலக்கத்தில் உள்ளனர். அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், டி.டி.வி. தினகரன் பாஜகவை எதிர்த்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றபின், சூழ்நிலைக்கு ஏற்ப பாஜகவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்க வாய்ப் புள்ளது. இதனால் அவர்களையும் சிறுபான்மையினர் நம்பவில்லை. இரு கூட்டணிகள் மீதும் நம்பிக்கை இல்லாததால் சிறுபான்மையினர் எங்களை முழுமையாக ஆதரிக் கின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT