Published : 24 Mar 2019 03:58 PM
Last Updated : 24 Mar 2019 03:58 PM
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்தகே.எஸ்.அழகிரி, ‘‘தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும்’’ என்றார். அவர் இப்படி கூறிய சில மணி நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது டெல்லி காங்கிரஸ் தலைமை. அந்தப் பட்டியலில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இல்லை.
ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இருவரில் யார் வேட்பாளர் என்று இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகனான டாக்டர் அருண் பெயரும் வேட்பாளர் பட்டியலுக்கான பரிசீலனையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கே.எஸ்.அழகிரி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார். 9 தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்களும் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு என ராகுல் முடிவு எடுத்திருப்பதால் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. சிவகங்கை தொகுதிக்கு இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தமிழகம் வர உள்ளனர்.
திமுக, காங்கிரஸ் கட்சிகளின் செயல்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிமுக, பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT