Published : 24 Mar 2019 09:43 AM
Last Updated : 24 Mar 2019 09:43 AM

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: உதயநிதி வேதனை

தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது என தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் உடையாப்பட்டி, வாழப்பாடி, நரசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் திறந்த வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர் மோடி, இப்போது வாக்கு சேகரிக்க தமிழகத்துக்கு வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கருப்புப் பணத்தை மீட்டு, அனைவரது வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதி அளித்தார்.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். என்னுடைய தாத்தா இலவச தொலைக்காட்சி வழங்கினார். எனது அப்பா இலவச கேபிள் டிவி இணைப்பு வழங்குவார்.

எட்டு வழிச்சாலையை எதிர்த்த அன்புமணி, மக்களை கைவிட்டு இப்போது அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். சீட்டுக்காக அதிமுக-வுடன் தேமுதிக கூட்டணி வைத்துக் கொண்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் எட்டு வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது, சிலரது குழந்தைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார். நரசிங்கபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி, அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்ததையறிந்து, கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸூக்கு வழி ஏற்படுத்தினார். வேட்பாளர் கவுதம சிகாமணியின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி பிரச்சாரத்தில் உடன் வந்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x