Published : 28 Mar 2019 07:13 AM
Last Updated : 28 Mar 2019 07:13 AM
‘‘ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. ஓட்டுக்காக கைல, காலுல விழ முடியாது’’ என அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை பேசியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் காலனியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை நேற்று வந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பேருந்து வசதியில்லை என்றும் கூறி தம்பிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபமடைந்த தம்பிதுரை, ‘‘நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. அதற்காக உங்க கைல, காலுல விழ முடியாது. நான் வராமல் போய்விடமாட்டேன். அடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு வருவேன். என்ன செய்தார் எம்பி என எதிர்க்கட்சியினர் உங்களிடம் கேட்பார்கள். பேருந்து விடுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ரூ.81 கோடியில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொகுதியில் 8,000 கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். இதற்கு முன் பலர் எம்பிக்களாக இருந்துள்ளனர். அவர்களெல்லாம் என்ன செய்தார்கள்’’ என்று பேசினார்.
தம்பிதுரையின் இந்த பேச்சால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, பாஜக மாவட்டத் தலைவர் முருகானந்தம், கரூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கே.சிவசாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
இதேபோல ஏமூர், ஏமூர் காலனி, வடக்குபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தம்பிதுரையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏமூர் புதூர் காலனியில் தம்பிதுரை பேசியபோது, ‘‘இதற்கு முன் முருகையா, முருகேசன், சின்னசாமி, நாட்ராயன் ஆகியோர் எம்பிக்களாக இருந்தனர். அவர்கள் என்ன செய்தார்கள்’’ என பெயர்களைக் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டவர்களில் முருகேசன், சின்னசாமி ஆகியோர் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்பிக்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூரிலும் முற்றுகை
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான என்.ஆர்.சிவபதி, ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா.தமிழ்ச்
செல்வனும் உடனிருந்தார். து.களத்தூர் கிராமத்துக்குச் சென்றபோது அங்கு திரண்டிருந்த மக்கள் வேட்பாளர் சிவபதி, எம்எல்ஏ தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்டனர்.
‘‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எம்பி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க அதிமுக வேட்பாளர் மருதராஜா வந்தார். தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆன பிறகு இந்தப் பக்கம் வரவேயில்லை. குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை’’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களை சமாதானம் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT