Published : 26 Mar 2019 01:55 PM
Last Updated : 26 Mar 2019 01:55 PM
சித்திரைத் திருவிழாவுடன் தேர்தல் திருவிழாவையும் சந்திக்கவுள்ளது மதுரை. மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் ராஜ் சத்யன். இவர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகன்.
அதிமுக வேட்பாளர்களிலேயே இளம் வேட்பாளர், படித்த இளைஞர், விளையாட்டில் ஆர்வம் மிக்கவர், சமூக வலைதளங்களைக் கையாளவதில் ஜாம்பவான் என்று கட்சிக்குள் அறியப்படுகிறார் ராஜ் சத்யன்.
மதுரைக்கு என்றே தனியாக தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தில் பரபரப்பாக இருந்தரிடம் 'இந்து தமிழ் திசை'க்காக பேசினோம்.
இளம் வேட்பாளராக அறியப்படுகிறீர்கள். எடுத்த எடுப்பிலேயே எம்.பி. தேர்தல். ஓர் இளைஞராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எடுத்த எடுப்பிலேயே என்று சொல்லிவிட முடியாது. 2005-ம் ஆண்டு முதலே நான் அதிமுகவின் அரசியல் கொள்கைகளில் ஈடுபாட்டுடன் இருக்கிறேன். 'அம்மா'வால் நேரடியாக நான் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். தகவல் தொழில்நுட்பப் பிரிவு கட்டமைக்கப்பட்ட தருணத்திலிருந்து எனது அரசியல் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன். அப்பாவுடனேயே இருந்ததால் அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன். மதுரையின் தேவை என்னவென்பதை அவர் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு கூடைப்பந்து கூட்டமைப்பில் இருந்துள்ளேன். அதை ஓர் விளையாட்டாக மட்டும் பார்க்காமல் அமைப்பு சார்ந்ததாகப் பார்க்கிறேன். அந்த வகையில் நிர்வாக அனுபவம், கொள்கை முடிவுகளைக் கையாளும் அனுபவம் ஆகியனவற்றைப் பெற்றிருக்கிறேன். இவையெல்லாம் சேர்ந்தே எனது நிர்வாகத் திறனைக் கட்டமைத்ததால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பான நிர்வாகத் திறனை வெளிப்படுத்த இயலும் என நம்புகிறேன். அரசியல் எனக்குப் புதிதில்லை. ஆகையால் இந்தப் போட்டியை எடுத்த எடுப்பில் எதிர்கொள்ளும் போட்டியாக நான் பார்க்கவில்லை.
ஜெயவர்தன், ரவீந்திரநாத், நீங்கள்.. அதிமுகவில் வாரிசுகளுக்கான வாய்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எங்கள் 'அம்மா' வாரிசு அரசியலை அறவே வெறுப்பவர். கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயவர்தனை அவரே வேட்பாளராக அறிவித்தார். துணை முதல்வரின் மகனும் கட்சியில் செயல்பட்டவர்தான். அதனாலேயே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே சொன்னதுபோல் நான் 'அம்மா'வால் நேரடியாக ஐடி பிரிவுக்கு நியமிக்கப்பட்டேன். தமிழகம் தாண்டியும் அதிமுகவை சமூக வலைதளங்கள் வழியாக கொண்டு செல்லும் பணியில் இருந்தேன். அது மிகப்பெரிய அரசியல் அனுபவத்தைத் தந்தது. அதனால், எங்களுக்கான வாய்ப்பு வாரிசு என்பதால் வந்தது அல்ல. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அதிமுகவில் வாரிசு அரசியலே இல்லை. நாங்கள் அனைவருமே 'அம்மா'வின் வாரிசுகள்.
நீங்கள் ஐடி பிரிவில் இருந்துள்ளீர்கள்.. தேர்தலில் சமூக வலைதளங்களின் பங்கு பற்றிச் சொல்லுங்கள்.
சமூக வலைதளங்கள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பிரச்சாரத் தளமாக உள்ளன. 50% பிரச்சார பலம் கொண்டதாக இருக்கிறது. அதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் என்றாலும் அதிமுகவில் 50 வயதைக் கடந்தவர்கள்கூட கட்சிக்காக சமூக வலைதளப் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளங்கள் சர்வதேச அளவில் சந்தை கொண்ட தளம். இந்த நேரத்தில் என்னுடைய வேண்டுகோள் அதிமுக தொண்டர் ஒவ்வொருவரும் சமூக வலைதளத்தில் பிரச்சாகராக மாற வேண்டும்.
இந்தத் தேர்தலில் டிடிவி தாக்கம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? அதிமுகவுக்குப் பாதிப்பு இருக்குமா?
அமைப்பு ரீதியாகப் பார்க்கும் போது அதிமுகவுக்கு இருக்கும் பலம் திமுகவுக்கே இல்லை என்றுதான் சொல்வேன். அப்படியிருக்கும்போது டிடிவி தினகரனின் கட்சியால் எங்களுக்கு என்ன பாதிப்பு இருந்துவிட முடியும்?
சு.வெங்கடேசன் (மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர்), டேவிட் அண்ணாதுரை (மதுரை அமமுக வேட்பாளர்) இருவரில் யார் உங்களுக்கு கடினமான சவாலாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
முந்தைய கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும். பலமான அதிமுகவுக்கு அச்சுறுத்தலும் இல்லை, போட்டியும் இல்லை.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இருக்கிறது? மதுரைக்கான உங்கள் இலக்கு?
மதுரைக்கு மிகவும் அவசியமான அவசரமான தேவை என நான் பார்ப்பது நீர் ஆதாரங்களை சீர்படுத்துவது. மதுரையில் தண்ணீர் பிரச்சினையை சீர் செய்ய நீர் ஆதாரங்களை சீர்படுத்துவது மிகவும் அவசரம்.
அதேபோல், மதுரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் மதுரையின் கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். சாலை வசதியும் பாதாள சாக்கடை வசதியும் நகரின் கடைசிப் பகுதி வரை சென்று சேர வேண்டும். இது பட்டியலிடுவதற்கு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் மிகவும் அவசியமானது. மதுரைக்கென்று பிரத்யேகமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதும் இதற்காகத்தான். இது தாளில் இருக்கக்கூடிய எழுத்துகள் மட்டுமல்ல. இவற்றைச் செயல்படுத்த என்னிடம் திட்டம் இருக்கிறது. சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி மூலம் ரூ.100 கோடி வரை நிதியைத் திரட்ட இயலும். அரசாங்க உதவியும் நிறுவனங்களின் நிதி உதவியுடன் எனது திட்டஙளுக்குச் செயல்வடிவம் கொடுப்பேன்.
பிரச்சாரம் செய்து வருகிறீகள்.. மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது?
செல்லுமிடமெல்லாம் மக்கள் எளிதில் அங்கீகாரம் செய்கின்றனர். நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்துகின்றனர். பெண்கள் ஆதரவும் இருக்கிறது.
ஜெயலலிதா மறைவால் பெண்கள் வாக்குகளைப் பெறுவதில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படுமா?
'அம்மா'-வின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. ஆனால், முதல்வரும், துணை முதல்வரும் 'அம்மா'வின் வழியில்தான் ஆட்சி செலுத்துகின்றனர். 'அம்மா' வகுத்துக் கொடுத்த மக்களுக்குத் தேவையான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதனால் அதிகம் ஆதாயம் பெறுவது பெண்களே. ஆகையால் பெண்கள் வாக்குகளைப் பெறுவதில் அதிமுகவுக்கு பின்னடைவு நிச்சயமாக இருக்காது.
நீங்கள் ஜெயலலிதாவின் இழப்பை எப்படி உணர்கிறீர்கள்? அவர் இல்லாததால் அதிமுகவின் பிரச்சார பலம் குறைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறதே?
தாய் இல்லா பிள்ளையைப் போல் உணர்கிறேன். நான் மட்டுமல்ல அதிமுகவினர் அனைவருமே அப்படித்தான் உணர்கின்றனர். ஆனால், அனைவருமே தாய்விட்டுச் சென்ற கொள்கையின்படி நிற்கிறோம். எங்களை மக்கள் ஆதரிக்கின்றனர். அவரது குரல் நேரடியாக ஒலிக்காதது குறைதான் என்றாலும் அவர் வகுத்த திட்டங்கள் அவர் சார்பில் பேசும். முதல்வரும், துணை முதல்வரும் தங்கள் ஆட்சியின் மூலம் 'அம்மா'வின் குரலை ஒலிக்கச் செய்து வருகின்றனர். மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கலின்போது கூட்டணிக் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி?
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக ஊர்வலம் சென்றபோது தேமுதிக, பாமக என அனைத்துக் கட்சியினரும் எங்களுக்கு ஆதரவாக திரண்டு வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய அறைக்குள் செல்லும்போது 5 பேர் மட்டும்தான் செல்ல முடியும். கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் பிரதிநிதியை விட்டு மற்றொருவரை அழைத்துச் செல்ல இயலாது. தோழமைக் கட்சிகளை சரி சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே அப்படிச் சென்றோமே தவிர எங்கும் எதிலும் எங்கள் கொடியுடன் கூட்டணிக் கட்சிகளின் கொடியும் இணைந்தே பறக்கும்.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT